நள்ளிரவில் பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற பெண் அதிகாரி! 3 மணி நேரத்தில் 40 ஆண்கள் வம்பு
செய்தி முன்னோட்டம்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மல்காஜ்கிரி காவல் ஆணையர் வி. சுமதி.IPS நள்ளிரவில் மேற்கொண்ட அதிரடி 'அண்டர்கவர்' ஆபரேஷன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணப் பெண் பயணி போல நள்ளிரவு 12:30 முதல் அதிகாலை 3:30 மணி வரை தில்சுக்நகர் பேருந்து நிலையத்தில் அவர் தனியாக நின்று கள நிலவரத்தை ஆய்வு செய்தார். ஒரு பெண் நள்ளிரவில் தனியாகப் பயணிக்கும்போது சந்திக்கும் சவால்களைக் கண்டறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அந்த மூன்று மணி நேர இடைவெளியில், சுமார் 40 ஆண்கள் அவரிடம் வந்து தேவையற்ற முறையில் பேச முயன்றதாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்திருந்த போலீஸ் படை
உடனடி நடவடிக்கையில் இறங்கிய போலீஸ்
தவறாக அணுகிய ஆண்களில் பெரும்பாலானோர் மது அல்லது கஞ்சா போதையில் இருந்ததும், சிலர் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஆணையர் சுமதி தனியாக நின்றிருந்தாலும், அவருக்குப் பாதுகாப்பாகவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் சாதாரண உடையில் போலீஸ் குழுவினர் அருகிலேயே மறைந்திருந்தனர். தவறாக நடக்க முயன்ற நபர்களை உடனுக்குடன் தடுத்து நிறுத்திய போலீஸார், அவர்களைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பெண்கள் நள்ளிரவில் நடமாடும்போது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களைக் கண்டறிவது, இரவு நேர ரோந்துப் பணியின் திறனை மதிப்பிடுவது மற்றும் பொது இடங்களில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளை அடையாளம் காண்பது ஆகியவையே இந்த ஆபரேஷனின் முக்கிய நோக்கமாகும்.
நடவடிக்கை
கவுன்சிலிங் மற்றும் சட்ட நடவடிக்கை
கைது செய்யப்பட்டவர்களுக்குப் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. மேலும், அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரியின் இந்தத் துணிச்சலான முயற்சி சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வெறும் கேமராக்கள் மட்டும் போதாது, இது போன்ற நேரடி கள ஆய்வுகள் அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.