உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் மாங்க்ரோல் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியக் கடற்படையின் நீருக்கடியிலான கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்புத் திறன்களை கணிசமாக அதிகரிக்கும் நோக்கில், ஐஎன்எஸ் மாங்க்ரோல் எனும் அதிநவீனப் போர்க்கப்பல் கடற்படையில் அதிகாரப்பூர்வமாகப் சேர்க்கப்பட்டுள்ளது. கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம் இந்திய கடற்படைக்காக கட்டி வரும் எட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்களில் இது மூன்றாவது கப்பலாகும். வெற்றிகரமாக கட்டப்பட்டு முடிந்துள்ள இக்கப்பல் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) அன்று கடற்படையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
உள்நாட்டுத் தொழில்நுட்பம்
80 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுத் தொழில்நுட்பப் பயன்பாடு
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்ட் நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள இந்த மாங்க்ரோல் போர்க்கப்பல், 80 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இக்கப்பல், கரைக்கு அருகிலுள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டது.
மேலும், கடலோரக் கண்காணிப்பு, குறைந்த தீவிரக் கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் கண்ணிவெடிப் போர் முறைகளை சிறப்பாகக் கையாளும் வகையிலும் இக்கப்பல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாங்க்ரோல்
அதிநவீன ஆயுதங்கள் மற்றும் 'மாங்க்ரோல்' பெயரின் வரலாறு!
தண்ணீரை அதிவேகமாக பீச்சி அடித்து இயங்கும் வாட்டர்ஜெட் தொழில்நுட்பத்தில் செயல்படும் இக்கப்பல், எதிரி நீர்மூழ்கிகளைத் துல்லியமாகத் தாக்கும் டார்பிடோக்கள், ஏவுகணைகள், ரேடார்கள் மற்றும் சோனார் கருவிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மீன்பிடித் துறைமுக நகரமான மாங்க்ரோல் நினைவாக இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2004 ஆம் ஆண்டு வரை இந்திய கடற்படையில் சேவையாற்றி ஓய்வுபெற்ற ஐஎன்எஸ் மாங்க்ரோல் எனும் பழமையான கண்ணிவெடி அகற்றும் போர்க்கப்பலின் பாரம்பரியப் பெயரையே இதற்கு மீண்டும் சூட்டியுள்ளனர்.
பாகிஸ்தான் சீனா அச்சுறுத்தல்
பாகிஸ்தான் மற்றும் சீன அச்சுறுத்தல்களுக்குப் தகுந்த பதிலடி
அண்மைக் காலமாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக பாகிஸ்தான் கடற்படை, சீன உதவியுடன் ஏஐபி தொழில்நுட்பம் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை புதிதாக சேர்த்து தனது பலத்தைப் பெருக்கி வருகிறது.
இந்தத் தொழில்நுட்பம் வழக்கமான டீசல் நீர்மூழ்கிகள் நீண்ட நாட்கள் கடலுக்கு அடியிலேயே மூழ்கியிருக்க உதவுகிறது.
இந்த சூழலில், இந்தியாவும் சொந்தமாக ஏஐபி தொழில்நுட்பத்தை உருவாக்கி வரும் வேளையில், ஐஎன்எஸ் மாங்க்ரோல் கப்பலின் வருகை எதிரி நாடுகளின் நீர்மூழ்கி அச்சுறுத்தல்களை முறியடிக்க பெருமளவில் உதவும்.