கடலுக்கு அடியில் இனி ஒளிந்து கொள்ள முடியாது! இந்திய கடற்படையின் டால்பின் ஹண்டர் ஐஎன்எஸ் அஞ்சாதிப் தயார்
செய்தி முன்னோட்டம்
இந்தியக் கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில், ஐஎன்எஸ் அஞ்சாதிப் போர்க்கப்பல் இன்று (பிப்ரவரி 27, 2026) சென்னைத் துறைமுகத்தில் அதிகாரப்பூர்வமாகப் பணியில் இணைக்கப்பட்டது. ஆழமற்ற நீரில் நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மூன்றாவது கப்பல் இதுவாகும். கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவான இந்தக் கப்பல் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பில் ஒரு மைல்கல் என்று வர்ணிக்கப்பட்டது.
டால்பின் ஹண்டர்
டால்பின் ஹண்டர்: ஆழமற்ற கடலின் சவால்கள்
ஆழமற்ற கடற்பகுதிகளில் மறைந்திருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிவது மிகவும் கடினமான காரியம். இதற்காகவே இந்தக் கப்பலுக்கு டால்பின் ஹண்டர் என்ற செல்லப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 77 மீட்டர் நீளம் கொண்ட இந்த போர்க்கப்பல், கடற்கரையோரம் மற்றும் துறைமுகப் பகுதிகளில் பதுங்கியிருக்கும் எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களைத் துல்லியமாகக் கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டது. பெரிய போர்க்கப்பல்கள் நுழைய முடியாத குறுகிய மற்றும் ஆழம் குறைந்த பகுதிகளில் இது லாவகமாக செயல்படும்.
தொழில்நுட்பம்
அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பம்
ஐஎன்எஸ் அஞ்சாதிப் கப்பலில் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் சோனார் கருவிகள், இலகுரக டார்பிடோக்கள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் வாட்டர்-ஜெட் உந்துவிசை அமைப்பு, கப்பல் சுமார் 25 நாட்ஸ் வேகத்தில் செல்லவும், கடலில் மிக வேகமாகத் திசைமாறிச் செல்லவும் உதவுகிறது. மேலும், போர்க்கால நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகள் மட்டுமின்றி, கடற்கரை கண்காணிப்பு மற்றும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளிலும் இது ஈடுபடுத்தப்படும்.
இந்தியப் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பை உறுதி செய்தல்
உலகளாவிய எண்ணெய் கப்பல்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்தில் பெரும் பகுதி இந்தியப் பெருங்கடல் வழியாகவே நடைபெறுகிறது. சமீபகாலமாக இந்தப் பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அஞ்சாதிப் போன்ற கப்பல்களின் தேவை அதிகரித்துள்ளது. 1961 இல் கோவா விடுதலையின் போது முக்கியப் பங்காற்றிய அஞ்சாதிப் தீவின் நினைவாக இந்தக் கப்பலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 15 புதிய கப்பல்களைக் கடற்படையில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது இந்தியாவின் வளர்ந்து வரும் கடல்சார் வலிமையைக் காட்டுகிறது.