LOADING...
இந்தூரில் மீண்டும் விஷமான குடிநீர்: தூய்மை நகரில் அடுத்தடுத்து பாதிப்பு; 22 பேர் மருத்துவமனையில் அனுமதி
இந்தூரில், குடிநீர் விநியோகத்தால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது

இந்தூரில் மீண்டும் விஷமான குடிநீர்: தூய்மை நகரில் அடுத்தடுத்து பாதிப்பு; 22 பேர் மருத்துவமனையில் அனுமதி

எழுதியவர் Venkatalakshmi V
Jan 23, 2026
10:21 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் தூய்மையான நகரமாக புகழப்படும் இந்தூரில், அசுத்தமான குடிநீர் விநியோகத்தால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு பாகீரத்புரா பகுதியில் ஏற்பட்ட குடிநீர் மாசுபாட்டால் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள், தற்போது மோ (Mhow) பகுதியில் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மோ பகுதியை சேர்ந்த சுமார் 22 பேர் அசுத்தமான குடிநீரை பருகியதால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்றவர்களுக்கு வீட்டிலேயே மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25-க்கும் அதிகமாக உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நடவடிக்கை

மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை

தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் ஷிவம் வர்மா மருத்துவமனைக்கு நேரில் சென்று நோயாளிகளைச் சந்தித்து நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரக் குழுவினர் முகாமிட்டு, வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தூர் பாகீரத்புரா பகுதியில் ஏற்பட்ட முந்தைய பாதிப்பில், குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்ததே உயிரிழப்புகளுக்கு காரணம் என உறுதி செய்யப்பட்டது. அரசு தரப்பில் 15 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், உள்ளூர்வாசிகள் இந்த எண்ணிக்கை 25-க்கும் அதிகம் எனத் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் ஏற்கனவே மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்குச் சென்றுள்ள நிலையில், மீண்டும் ஒரு புதிய பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement