லண்டனில் மாயமான இந்திய மாணவர், ஜெய்சங்கரின் உதவியை நாடும் பாஜக தேசிய செயலாளர்
இங்கிலாந்தில் உள்ள லாஃப்பரோ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த ஜிஎஸ் பாட்டியா என்ற இந்திய மாணவர் கிழக்கு லண்டன் பகுதியில் இருந்து, கடந்த 15ஆம் தேதி முதல் மாயமானார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரான மஞ்சிந்தர் சிங் சிர்சா, ட்விட்டர் மூலம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்து, வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். பாட்டியாவை கிழக்கு லண்டனின் கேனரி வார்ஃப் பகுதியில், 15 ஆம் தேதி கடைசியாக பார்த்ததாக மஞ்சிந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவரை கண்டுபிடிக்க உதவுமாறு, லாஃப்பரோ பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.
காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக பல்கலைக்கழகம் பதில்
மஞ்சிந்தர் மேலும் பாட்டியாவின் குடியிருப்பு அனுமதி அட்டை மற்றும் கல்லூரி அடையாள அட்டைகளை ட்விட்டரில் பதிவிட்டு, அவரின் அடையாளங்களை பகிர்ந்துள்ளார். இந்தச் செய்தியைப் பகிருமாறு மக்களைக் மஞ்சிந்தர் சிங் கேட்டுக்கொண்டதுடன், இந்திய மாணவர் பற்றிய தகவல்களை வழங்க இரண்டு தொடர்பு எண்களைப் வழங்கியுள்ளார். மஞ்சிந்தர் சிங்கின் பதிவிற்கு பதில் அளித்துள்ள பல்கலைக்கழகத்தின் முதன்மை இயக்குனர், இதுகுறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருந்தது. முன்னர் இந்த மாதத்தில் இங்கிலாந்துக்கு படிக்கச் சென்ற மாணவர் மித்குமார் படேல்,23, நவம்பர் 17ஆம் தேதி மாயமான நிலையில், 21 ஆம் தேதி கேனரி வார்ஃப் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். "இவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக இல்லை" என காவல்துறை தெரிவித்திருந்தது.