'சந்தைப்படுத்துதலுக்கு AI-யில் முதலீடு செய்ய நாங்கள் தயார்' - புதிய ஆய்வு!
குறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களிடம் (SMBs) லிங்க்டுஇன் தளம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், பொருளாதார நிலவரங்களைக் கடந்து, 'சந்தைப்படுத்துதல்' (Marketing) தங்கள் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியம் எனக் கருதுவதாகத் தெரிவித்திருக்கின்றன. 10-ல் 9 நிறுவனங்கள் சந்தைப்படுத்துதலுக்காக ஆட்டோமேஷன் மற்றும் AI தொழில்நுட்பங்களை பயன்படுத்த விரும்புவதாகவும், அதற்காக குறிப்பிட்ட தொகையை (சிறிய தொகையை) ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றன. இந்திய SMB-க்கள் சராசரியாக தங்கள் ஆண்டு வருவாயில் 26%-த்தை சந்தைப்படுத்துதலில் முதலீடு செய்கின்றன. தற்போது, வாடிக்கையாளர்களைப் பெருக்குவது, வருவாய் மற்றும் சந்தை மதிப்பை உயர்த்துவது, நம்பகத்தைன்மையை கட்டமைப்பது ஆகியவையே இந்திய SMB-க்களின் முக்கியக் குறிக்கோள்களாக இருக்கின்றன. இந்த குறிக்கோள்களை அடைய சந்தைப்படுத்துவதற்கு AI உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யவும் அவை தயாராக இருக்கின்றன.
சந்தைப்படுத்துதலில் புதிய தொழில்நுட்பங்கள்:
ஆய்வில் பங்கெடுத்த நிறுவனங்களில் 93% நிறுவனங்கள் சாட்ஜிபிடி உள்ளிட்ட AI கருவிகள் தங்கள் வணிகத்தை சந்தைப்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புவதாகத் தெரிவித்திருக்கின்றன. 42% நிறுவனங்கள், AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் குறித்து இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருப்பதால்,சந்தைப்படுத்துதலுக்காக அவற்றில் முதலீடு செய்யப் போவதில்லை எனக் கூறியிருக்கின்றன. இது குறித்து லிங்க்டுஇன் நிறுவனத்தின் இந்திய மேலாளர், அஷூடோஷ் குப்தா பேசும் போது, "SMB-க்களுக்கு நேரமும் மிக முக்கியமான ஒரு வளம். அந்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய சூழல் இருக்கும். அப்படியான ஊழியர்களுக்கு இந்த ஆட்டோமேஷன் மற்றும் AI கருவிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.