LOADING...
செயற்கைக்கோள் படத்தில் அதிர்ச்சி; இந்தியாவைத் திணறடிக்கும் 64% பருவமழை பற்றாக்குறை
இந்தியாவைத் திணறடிக்கும் 64% பருவமழை பற்றாக்குறை

செயற்கைக்கோள் படத்தில் அதிர்ச்சி; இந்தியாவைத் திணறடிக்கும் 64% பருவமழை பற்றாக்குறை

எழுதியவர் Venkatalakshmi V
Jun 15, 2026
02:24 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் தென்மேற்கு பருவமழை, தெற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் நுழைந்த சில நாட்களிலேயே திடீரென தீவிரத்தை இழந்து நாடெங்கும் முற்றிலும் முடங்கியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தற்போதைய செயற்கைக்கோள் தரவுகள், நாடு முழுவதும் மழைப்பொழிவில் ஒரு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, ஜூன் 4 முதல் ஜூன் 15 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் இயல்பான சராசரி மழைப்பொழிவு 53.7 மிமீ ஆக இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு வெறும் 19.2 மிமீ மட்டுமே மழை பதிவாகியுள்ளது. தற்போதைய வானிலை முன்னறிவிப்பு மாதிரிகளின்படி, இந்த வாரத்தின் பிற்பகுதியில் ஜெட் காற்றின் வேகம் குறைந்து, பருவமழைக் சுழற்சி மீண்டும் சீரமைக்கப்பட வாய்ப்புள்ளது.

பற்றாக்குறை

64% வரலாறு காணாத மழைப் பற்றாக்குறை

"இது தேசிய அளவில் ஒட்டுமொத்தமாக 64 விழுக்காடு (64%) மழைப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது" என IMD கூறுகிறது. ஜூன் 15 அன்று அதிநவீன INSAT-3DS செயற்கைக்கோள் எடுத்து அனுப்பிய மேகப்படங்கள் வானிலை ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. வழக்கமாகப் பருவமழைக் காலத்தில் தென்னிந்தியா மற்றும் மத்திய இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் அடர்ந்த கரும் மேகக்கூட்டங்கள் இன்றி, இப்பகுதிகள் மேகங்களற்று வெட்டவெளியாகக் காட்சியளிக்கின்றன. தற்போது மழை மேகங்கள் அனைத்தும் இமயமலைப் பகுதிகள், வடகிழக்கு இந்தியா மற்றும் இந்தோ-கங்கைச் சமவெளியின் வடக்குப் பகுதிகளில் மட்டுமே குவிந்துள்ளன. அரபிக்கடல் பகுதியில் இருந்து வீசும் பருவமழைக் காற்று மிகவும் பலவீனமடைந்து சிதறிக் காணப்படுகிறது.

காரணம்

பருவமழை முடங்கியதற்குக் காரணம் என்ன?

கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா பகுதிகளில் பருவமழை ஏற்கனவே நுழைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அது மழையைத் தரத் தவறியுள்ளது. கடலில் போதிய ஈரப்பதம் இருந்தபோதிலும், வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் நிலவும் காற்றழுத்த முரண்பாடே இதற்குக் காரணம்.. வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் அதிவேகமாக வீசும் இந்த மேலைக் காற்று, வழக்கமான இடத்தை விட்டு நகர்ந்து இந்தியாவிற்கு மிக அருகில் தெற்கு நோக்கி இறங்கியுள்ளது வழக்கமாக இக்காலத்தில் மேகங்களை உருவாக்கி இடியுடன் கூடிய மழையைத் தரும் கீழ்த்திசை ஜெட் காற்றை, இந்த வலுவான மேலைக் காற்று தடுத்து நிறுத்துகிறது. இதனால் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் போதிய ஈரப்பதம் இருந்தபோதிலும், வளிமண்டல மேல் அடுக்குச் சூழல் மேகங்கள் உருவாவதைத் தடுத்து, இந்த இடைவேளையை உருவாக்கியுள்ளது.

Advertisement