அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரிப்பு - இந்திய தேர்தல் ஆணையம் கடிதம்
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடந்தது, இதில் பொது செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். மேலும் அந்த கூட்டத்தில் கட்சியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்படுவது உள்ளிட்ட சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குகளின் தீர்ப்பின் படி எடப்பாடி அதிமுக செயலாளராக தேர்வுசெய்யப்பட்டது செல்லும் என்றும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்றும் உத்தரவிடப்பட்டது. எனினும் இது குறித்த வழக்கு ஒன்று சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கர்நாடகா மாநில தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம்
இதற்கிடையே இந்திய தேர்தல் ஆணையம் அவரை பொதுச்செயலாளராக அங்கீகரிக்காமல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிட்டு வந்தது. இதனால் தம்மை அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்க உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிச்சாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு 10 நாட்களில் முடிவெடுப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம், கர்நாடகா மாநில தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது. அதில், கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தரப்பு வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அதிமுக'வின் திருத்தப்பட்ட விதிகள், நிர்வாகிகள் மாற்றம் ஏற்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.