'இந்திய அதிகாரிகள் கனடாவில் மிரட்டப்பட்டனர்': வெளியுறவு அமைச்சர்
கடந்த ஆண்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தூதரகம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய தூதர்கள் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்பட்டதாலும் மிரட்டப்பட்டதாலும், கனேடிய அமைப்பிலிருந்து எந்த உதவியும் கிட்டாததாலும் தான் கனடாவில் விசா வழங்குவதை இந்தியா இடைநிறுத்த வேண்டி இருந்தது என்று வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பரில், கனேடிய குடிமக்களுக்கு விசா வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இந்திய-கனடா மோதல்களால் ஏற்பட்ட பிரச்சனைகள்
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா மற்றும் கனடா இடையே பல மாதங்களாக தூதரக மோதல்கள் நடந்து வருகின்றன. காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து, அவரது கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனட அரசாங்கம் பெரும் குற்றசாட்டை முன்வைத்தது. இதனால், இந்திய-கனட உறவுகள் சிதைந்துள்ளன. இதனையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில், கனேடிய குடிமக்களுக்கு விசா வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. சில வாரங்களுக்குப் பிறகு விசா சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. ஆனால், இந்தியா தொடர்ந்து கனடாவின் குற்றசாட்டை மறுத்து வருகிறது.