தபால்துறையில் பணிக்கு விண்ணப்பித்து 28 ஆண்டுகளுக்கு பின்னர் வேலைவாய்ப்பு பெற்ற நபர்
கடந்த 1995ம்.,ஆண்டு தபால்துறை உதவியாளர் பணிக்கான விண்ணப்பத்தினை அங்குர் குப்தா என்பவர் பதிவுச்செய்துள்ளார். அதன்படி அவர் புதுமுக பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் 'இன்டர்மீடியேட்' படிப்பினை தொழிற்கல்வி பாடமுறையில் முடித்துள்ளார் என்னும் காரணத்திற்காக அவரது பெயர் 'மெரீட்' பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தன்னைப்போல இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட சிலரோடு இணைந்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அங்குர் குப்தா வழக்கு தொடர்ந்துள்ளார். அதற்கான தீர்ப்பு இவர்களுக்கு ஆதரவாக கடந்த 1999ம்.,ஆண்டு வெளியானது. ஆனால் அத்தீர்ப்பினை எதிர்த்து 2000ம்.,ஆண்டு தபால்துறை சார்பில் அலகாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனு 2017ம்.,ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மீண்டும் 2021ம்.,ஆண்டில் மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஒரு மாதத்திற்குள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் - நீதிபதிகள்
அதன்பின்னர் தபால் துறை இது குறித்த மேல்முறையீட்டு மனுவினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்று(அக்.,26) உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் இந்த வழக்கினை தள்ளுபடி செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அப்துர் குப்தாவிற்கு பணி வழங்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் நீதிபதிகள், 'பணி நியமனத்தினை வகுக்கப்பட்ட உரிமையாக கோர முடியாது' என்றும், 'ஆனால் ஒருமுறை அவரது பெயர் 'மெரிட்'பட்டியலில் இடம்பெற்ற பின்னர் எவ்வித சரியான காரணமுமின்றி தனிச்சையாக எந்தவொரு நிறுவனமும் அவரது பெயரினை நீக்க முடியாது' என்றும் கூறியுள்ளனர். அதனைத்தொடர்ந்து, 'ஒருமாத காலத்திற்குள் அவரை பணியில் நியமிக்கவேண்டும்'. 'அதன்பின்னர் அவரது பணித்திறனில் திருப்தியில்லையென்றால் அவரது பணியினை நிரந்தரமாக்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்' என்றும் கூறப்பட்டுள்ளது.