ரூ.23,000 கோடி மதிப்பில் புதிய ராணுவத் தளவாடங்களை வாங்கிய இந்தியா
இந்தியா மற்றும் சீனா இடைய கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அவசரகால முறையில் ராணுவ தளவடாங்களை கொள்முதல் செய்து வருகிறது இந்தியா. கடந்த ஓராண்டில் மட்டும் ராணுவத்தை வலிமைப்படுத்துவதற்காக ரூ.23,500 கோடிக்கு ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது இந்தியா. சாதாரணமாக ராணுவ தளவாடங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதற்கு பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். மேலும், அதற்கு கால அவகாசமும் அதிகமாகத் தேவைப்படும். எனவே, அவசரகால கொள்முதல் முறையில் நான்கு கட்டங்களாகக் கடந்த ஒருவருடங்களாக ராணுவ தளவாடங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது இந்தியா.
இந்திய ராணுவத்திற்கான புதிய ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள்:
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த செப்டம்பர் 2023-க்குள், ரூ.8,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது இந்திய விமானப் படை. அதேபோல், இந்திய கப்பற் படையும் ரூ.4,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது. நான்கு கட்டங்களாக புதிய ராணுவ தளவாடங்கள் வாங்கப்பட்டிருக்கும் நிலையில், முதல் மூன்று கட்டங்களில் ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், நான்காம் கட்டத்தில் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து தளவாடங்கள் வாங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மேற்கூறிய ஒப்பந்தங்களின் கீழ், தாக்குதல் ட்ரோன்கள், தற்காப்பு ட்ரோன்கள், கண்காணிப்பு சாதனங்கள், ரேடார்கள், வீரர்கள் பாதுகாப்பு கவசங்கள், அனைத்து தளங்களிலும் இயங்கு வாகனங்கள் மற்றும் ஏவுகணைகள் ஆகிய ராணுவ உபகரணங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன.