இந்திய விமானப்படையில் 17 நாள் போர்ப்பயிற்சி அறிவிப்பு; அலறியடித்து அவசர ஆலோசனை மேற்கொள்ளும் பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
இந்திய எல்லைப் பகுதியான ராஜஸ்தானின் வான்வெளியில் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரை 17 நாட்களுக்கு மாபெரும் வான்வழிப் போர்ப்பயிற்சியை நடத்த இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது. இதற்காக வான்வெளிப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பிரத்யேக NOTAM (Notice to Air Missions) அறிவிக்கையை இந்தியா வெளியிட்டுள்ளது. எல்லைக்கு மிக அருகில் இந்தியப் போர் விமானங்கள் நடத்தவுள்ள இந்த அதிரடிப் பயிற்சியால் பாகிஸ்தான் ராணுவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பீதி
பாகிஸ்தான் ராணுவத்தின் அவசரக் கூட்டமும் பீதியும்
இந்தியாவின் இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் அவசரக் கூட்டத்தைக் கூட்டி நிலைமை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
இந்திய எல்லையை ஒட்டிய வான்வெளியில் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பணியைப் பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
சர்வதேச எல்லைக்கோடு பகுதிக்கு வெறும் 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த பயிற்சிகள் நடைபெறவுள்ளது பாகிஸ்தான் தலைமைகளுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
வான்வெளி மூடல்
40,000 அடி உயரத்தில் ஜெய்சல்மேர்-ஜோத்பூர் வான்வெளி மூடல்
இந்திய வான்படை வெளியிட்டுள்ள நோட்டம் அறிவிக்கையின்படி, ஜெய்சல்மேர், பார்மர், பலோடி, ஜோத்பூர் மற்றும் பிகானேர் ஆகிய எல்லைப் பகுதிகளின் வான்வெளி தற்காலிகமாகப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40,000 அடி உயரம் வரையிலான வான்வெளிப் பகுதி இந்தியப் போர் விமானங்களின் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த 17 நாள் போர்ப்பயிற்சியின் போது இந்திய வான்படையின் முன்னணி போர் விமானங்கள் எல்லைப்பகுதியில் தீவிரமாகத் தங்களது தாக்குதல் திறன்களை சோதித்துப் பார்க்க உள்ளன.
பன்னாட்டுப் பயிற்சி
தரங் சக்தி 2026 பன்னாட்டு விமானப்படைப் பயிற்சி
இந்த 17 நாள் போர்ப்பயிற்சியைத் தொடர்ந்து, ஜோத்பூரில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 12 வரை நடைபெறும் தரங் சக்தி 2026 என்ற பன்னாட்டு விமானப்படைப் பயிற்சியும் நடைபெறவுள்ளது.
இதில் உலக நாடுகளின் பல முன்னணி விமானப்படைகள் பங்கேற்க உள்ளதால், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமனாப்படையின் ஆதிக்கம் உச்சத்தில் இருக்கும்.
இதன் மூலம் இந்திய முப்படைகளின் தயார்நிலையும், வான்வழித் தாக்குதல் திறன்களும் மீண்டும் நிரூபிக்கப்படும்.