இந்தியாவில் ஜனநாயக திருவிழா கொண்டாட்டம் - பிரதமர் மோடி
கோவா மாநிலத்தில் ஜூன் 19ம் தேதி முதல் நாளை(ஜூன்.,22) வரை ஜி-20 சுற்றுலா பணிக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பல நாடுகளில் இருந்து 20 பிரதிநிதிகள் கோவாவிற்கு வருகை தந்துள்ளார்கள். இந்த ஜி-20 கூட்டத்தில் உலகளவில் சுற்றுலா துறை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அதற்கான தீர்வுகள் காணப்படவுள்ளது. இதன் காரணமாகவே இக்கூட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தற்போது அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "பயங்கரவாதம் நம்மை பிரிக்கிறது, ஆனால் சுற்றுலா நம் அனைவரையும் ஒன்றுப்படுத்துகிறது" என்று கூறினார்.
சுற்றுலா அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றாக இணைக்கிறது
அதனை தொடர்ந்து பேசிய அவர், "சுற்றுலா என்பது அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்து இணக்கமான சமுதாயத்தினை உருவாக்கும் ஆற்றலினை கொண்டதாகும். இந்தியா பண்டிகளின் தேசமாக கருதப்படுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் ஏதேனும் ஓர் திருவிழா நடந்து கொண்டு தான் இருக்கும்" என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், கோவாவில் 'சாவ் ஜோவா' என்னும் திருவிழா விரைவில் நடக்கவுள்ளது. ஜனநாயகத்தின் தாயகமாக உள்ள இந்தியாவில் அனைவரும் பார்க்க வேண்டிய 'ஜனநாயகத்தின் திருவிழா' என்று ஒன்று உள்ளது என்று கூறியுள்ளார். தொடர்ந்து, "அடுத்தாண்டு இந்தியாவில் பொது தேர்தல் நடக்கவுள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி வாக்காளர்கள் ஒரு மாதத்திற்கு மேல் இவ்விழாவினை கொண்டாடி, ஜனநாயகம் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையினை மீண்டும் உறுதிப்படுத்துவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.