பிரிக்ஸ் மாநாட்டிற்கு முன் அருணாச்சல பிரதேச வரைபடத்தை இந்தியா மாற்றியது ஏன்? முழு பின்னணி
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு அருணாச்சல பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ வரைபடத்தைப் புதுப்பித்து, சீன எல்லையோரப் பகுதியில் உள்ள வியூக ரீதியிலான கணவாய்கள், ஏரிகள், குடியிருப்புகள் மற்றும் 1962 போர் நினைவிடங்கள் உள்ளிட்ட 27 முக்கிய இடங்களை அதில் புதிதாக பெயரிட்டுள்ளது. வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெறவுள்ள சூழலிலும், அதில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்கவுள்ள நிலையிலும் இந்தியாவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.
முக்கிய இடங்கள்
சேர்க்கப்பட்டுள்ள 27 முக்கிய இடங்களின் விவரங்கள்
புதுப்பிக்கப்பட்ட வரைபடத்தில் தாக் லா, ஜோ லா, ரிசா லா மற்றும் புகூர் லா ஆகிய 4 மலைக்கணவாய்களும், சாம்போ சரோவர் என்ற உயரமான ஏரியும் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் 1962 இந்திய-சீனப் போரின் போது முக்கியக் களமாக விளங்கிய தாக் லா கணவாய் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், லாங்ஜு, ஜெய்ராம்பூர், ஜஸ்வந்த் கர் மற்றும் ஷேர்-இ-தாபா ராணுவ வீரரின் நினைவுச் சின்னம் உள்ளிட்ட 22 குடியிருப்புப் பகுதிகளும் அதிகாரப்பூர்வமாக இந்திய வரைபடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளன.
சீனாவிற்கு பதிலடி
சீனாவின் பெயர் மாற்றும் உத்திக்கு இந்தியாவின் பதிலடி
அருணாச்சல பிரதேசத்தை ஜங்னான் (தெற்கு திபெத்) என உரிமை கொண்டாடும் சீனா, 2017, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அம்மாநில இடங்களுக்கு தன்னிச்சையாக சீனப் பெயர்களை சூட்டி பட்டியல்களை வெளியிட்டது.
சீனாவின் இந்த உரிமை கோரல்களைத் தொடர்ந்து நிராகரித்து வரும் இந்தியா, அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை உறுதிப்படுத்தவும், சீனாவின் வரைபட ஆக்கிரமிப்பிற்குப் பதிலடி கொடுக்கவுமே இந்த வரைபடப் புதுப்பித்தலை அதிகாரப்பூர்வமாக மேற்கொண்டுள்ளது.
அதிலும், பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள சீன அதிபர் வரும் செப்டம்பரில் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
எல்லைப் பேச்சுவார்த்தை
எல்லைப் பேச்சுவார்த்தைகளும் ராஜதந்திர நகர்வுகளும்
சமீபத்தில் புதுடெல்லியில் இந்திய-சீன எல்லை விவகாரங்கள் குறித்த 36வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2020 கிழக்கு லடாக் மோதலுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவிற்கு வரவுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திப்பதற்கு முன், எல்லைப் பகுதியில் தனது இறையாண்மையை இந்தியா பலமாகப் பதிவு செய்துள்ளது.
இது இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவிற்கு கூடுதல் பலத்தை அளிக்கும்.