ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம்
சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் இந்தியாவின் மூன்றாவது திட்டமான 'சந்திராயன்-3'யானது, ஜூலை 2வது வாரத்தில் விண்ணில் செலுத்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத். கேரளாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் நடைபெற்ற விண்வெளி கண்காட்சி மற்றும் ஒருநாள் பயிற்சியை தொடங்கி வைத்தபோது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது இந்த தகவலைத் தெரிவித்திருக்கிறார் அவர். தொழில்நுட்பக் கோளாறுகள் எதுவும் ஏற்படாத பட்சத்தில் ஜூலை 12 முதல் 19-ம் தேதிக்குள் சந்திராயன்-3 திட்டமானது செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் அவர். மேலும், இத்திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் விண்கலமும் சதீஷ் தவான் ஏவதல் தளத்தை அடைந்திருப்பதாகவும், அதனை அசம்பிள் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் சோம்நாத்.
சந்திராயன்-3:
சந்திராயன்-2 திட்டத்தின் தோல்வியையடுத்து, அதன் நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற சந்திராயன்-3 திட்டமிடப்பட்டது. 2024-ல் ஜப்பானுடன் இணைந்து நிலவின் துருவப் பகுதிகளை ஆய்வு செய்யவிருக்கிறது இந்தியா. அந்தத் திட்டத்திற்கான முன்னோட்டமாக இந்த சந்திராயன்-3 திட்டம் பார்க்கப்படுகிறது. நிலவில் வெற்றிகரமாக லேண்டரை தரையிறக்குவது, நிலவில் ரோவரை பயன்படுத்துவது மற்றும் கூடுதலாக சில அறிவியல் சோதனைகளை இந்தத் திட்டத்தின் மூலம் நிலவில் செய்து பார்க்கவிருக்கிறது இஸ்ரோ. இந்தத் திட்டத்திற்கு LVM3 (Launch Vehicle Mark 3) ராக்கெட் பயன்படுத்தப்படவிருக்கிறது. சந்திராயன்-3யின் மூலம் நிலவின் மேல்பகுதியில் சூரியஒளியே படாத இடங்களை சோதனை செய்யத் திட்டமிடப்பட்டிருக்கிறது. சந்திராயன்-2 திட்டத்தில் ஆர்பிட்டர் ஒன்றும் பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் ஆர்பிட்டர் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.