LOADING...
'நாங்க யார்கிட்டயும் பர்மிஷன் கேட்கல!' ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா கொடுத்த கெத்தான பதில்
ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு யாருடைய அனுமதியும் எங்களுக்குத் தேவையில்லை என மத்திய அரசு விளக்கம்

'நாங்க யார்கிட்டயும் பர்மிஷன் கேட்கல!' ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா கொடுத்த கெத்தான பதில்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 07, 2026
05:59 pm

செய்தி முன்னோட்டம்

ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை (மார்ச் 7) தெரிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா தற்காலிக அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தியா எந்தவொரு நாட்டின் அனுமதியையும் சார்ந்து இயங்கவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

விலை

போட்டி விலையே முக்கியம்

தேசிய நலனைக் கருத்தில் கொண்டு, குறைந்த மற்றும் போட்டித்தன்மை கொண்ட விலையில் எண்ணெய் வழங்கும் எந்த நாட்டிலிருந்தும் இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்யும் என்று அரசு கூறியுள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதி ஆதாரங்களை 27 நாடுகளிலிருந்து 40 நாடுகளாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மாற்று விநியோகப் பாதைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பிப்ரவரி 2026லும் ரஷ்யாவே இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் விநியோகஸ்தராக நீடிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இந்தியா ரஷ்ய எண்ணெயைத் தொடர்ந்து வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

கையிருப்பு

போதிய இருப்பு மற்றும் சுத்திகரிப்பு திறன்

சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றமான சூழலைச் சமாளிக்க இந்தியாவிடம் போதிய இருப்பு உள்ளதாக அரசுத் தரப்பு உறுதி அளித்துள்ளது. இந்தியாவிடம் தற்போது 250 மில்லியன் பேரல்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன. இது சுமார் 7 முதல் 8 வார கால நுகர்வுக்குப் போதுமானது. இந்தியாவின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்பு திறன் ஆண்டுக்கு 258 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது. இது உள்நாட்டுத் தேவையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

விளக்கம்

அமெரிக்காவின் அனுமதி குறித்த தெளிவுபடுத்தல்

நடுக்கடலில் தேங்கியுள்ள ரஷ்ய எண்ணெய்யை வாங்க அமெரிக்கா அனுமதி அளித்திருப்பது ஒரு குறுகிய கால நடவடிக்கை மட்டுமே என்று சொல்லப்படுவதை மத்திய அரசு மறுத்துள்ளது. "இந்த வர்த்தகம் ஏற்கனவே தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்தியா ஒரு நிகர ஏற்றுமதியாளராக உலகிற்கு சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை வழங்கி வருகிறது. இது எங்களின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துகிறதே தவிர, பலவீனப்படுத்தவில்லை." என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement