உலகையே வியக்க வைத்த இந்தியா! 10 வருடத்தில் சோலார்சக்தி மின் தயாரிப்பில் 50 மடங்கு வளர்ச்சி
செய்தி முன்னோட்டம்
இந்தியா கடந்த பத்து ஆண்டுகளில் எரிசக்தித் துறையில் உலகம் வியக்கும் அளவிலான ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2014 ஆம் ஆண்டு வெறும் 3 ஜிகாவாட்டாக இருந்த இந்தியாவின் சோலார் மாட்யூல் உற்பத்தித் திறன், தற்போது 172 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இந்த மைல்கல் சாதனையை உறுதிப்படுத்தினார். இறக்குமதியை சார்ந்திருந்த ஒரு நாடு, இன்று உலகளாவிய அளவில் சூரியசக்தி உற்பத்தியில் முன்னிலை வகிப்பது ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
வித்தியாசம்
சோலார் செல் மற்றும் மாட்யூல்
சூரிய ஒளியை நேரடியாக மின்சாரமாக மாற்றும் சிறிய அலகுகள் சோலார் செல்கள் என்று அழைக்கப்படுகின்றன. பல செல்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரு பலகையாக உருவாக்கப்படுவதே சோலார் மாட்யூல் ஆகும். இந்தியா தற்போது 172 ஜிகாவாட் மாட்யூல் உற்பத்தித் திறனுடன், 27 ஜிகாவாட் சோலார் செல் உற்பத்தித் திறனையும் பெற்றுள்ளது. நாட்டின் தேசிய மின் விநியோகக் கட்டமைப்பில் தற்போது 144 ஜிகாவாட் சூரிய மின்சாரம் நேரடியாகப் பாய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டம்
பிஎம் சூர்ய கர் முஃப்ட் பிஜிலி யோஜனா
இந்தியாவின் சூரியசக்தி புரட்சி இப்போது வெறும் பெரிய பூங்காக்களுடன் நின்றுவிடாமல், சாமானிய மக்களின் வீடுகளின் மேற்கூரைக்கும் வந்துவிட்டது. மத்திய அரசின் மானியத்துடன் கூடிய பிஎம் சூர்ய கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு சுமார் 10,000 வீடுகளில் சோலார் யூனிட்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 40 லட்சம் வீடுகளில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
பிஎல்ஐ
பிஎல்ஐ திட்டத்தின் அபார பங்களிப்பு
இந்தியாவிலேயே சோலார் பேனல்களைத் தயாரிக்க ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். இத்திட்டத்தின் மூலம் சிலிக்கான் முதல் இறுதிப் பேனல் வரை அனைத்துப் பாகங்களையும் இந்தியாவிலேயே தயாரிக்க நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. சோலார் மட்டுமன்றி, காற்றாலை மின் உற்பத்தித் திறனும் தற்போது 55 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் பசுமை எரிசக்தி இலக்குகளை விரைவுபடுத்தியுள்ளது.
இலக்கு
2026க்கான இந்தியாவின் அதிரடி இலக்கு
வருகின்ற ஜூன் 1, 2026 முதல் இந்தியாவில் செயல்படுத்தப்படும் அனைத்து சூரியசக்தி திட்டங்களிலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சோலார் செல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. 2026க்குள் உள்நாட்டு சோலார் செல் உற்பத்தியை 42 ஜிகாவாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி முடிவின் மூலம் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை உயர்வு மற்றும் விநியோகத் தடைகளில் இருந்து இந்தியாவைப் பாதுகாக்க முடியும் என அரசு நம்புகிறது.