LOADING...
இந்திய விசா விதிமுறைகளில் மாற்றம்: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய திருத்தங்கள்
விசா விதிமுறைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது

இந்திய விசா விதிமுறைகளில் மாற்றம்: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய திருத்தங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 02, 2026
12:39 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் தங்களின் விசா காலத்தை நீட்டிப்பதற்கான விதிமுறைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. 'குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் விதிகள், 2025'-ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய திருத்தங்கள், வெளிநாட்டினரைக் கண்காணிக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்துவதையும், இமிக்ரேஷன் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. பழைய விதிகளின்படி, 180 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான விசா காலத்தைக் கொண்ட வெளிநாட்டினர், இந்தியா வந்து 180 நாட்கள் முடிந்த பிறகு அடுத்த 14 நாட்களுக்குள் தங்களைப் பதிவு (Registration) செய்ய அனுமதி இருந்தது. ஆனால், தற்போது திருத்தப்பட்டுள்ள 'விதி 12'-ன் படி, வெளிநாட்டினர் தங்களின் 180 நாட்கள் விசா காலம் முடிவடைவதற்கு முன்பாகவே பதிவு செய்ய வேண்டும் என காலக்கெடு மாற்றப்பட்டுள்ளது.

விதி

180 நாட்கள் விசா நிபந்தனை உள்ளவர்களுக்கும் புதிய விதி

இந்த விதிமுறை மாற்றம் 180 நாட்களுக்கும் மேலான விசா வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும். ஒருமுறை இந்தியா வந்தால் 180 நாட்களுக்கு மேல் தங்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் விசா பெற்றவர்கள், ஏதேனும் ஒரு அவசரச் சூழலில் 180 நாட்களைத் தாண்டியோ அல்லது ஒரு காலண்டர் ஆண்டில் ஒட்டுமொத்தமாகவோ தங்க நேரிட்டால், அவர்கள் 180 நாட்கள் முடிவதற்குள் பதிவை முடிக்க வேண்டும். மேலும், இத்தகைய விசா நீட்டிப்புகள் மிக அத்தியாவசியமான அவசரச் சூழ்நிலைகளில் (Emergent circumstances) மட்டுமே வழங்கப்படும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

நிவாரணம்

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்குக் கிடைத்துள்ள முக்கிய நிவாரணம்

வெளிநாட்டு தம்பதியருக்கு இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளின் விசா மற்றும் எக்சிட் பெர்மிட் சேவைகளைப் பெற, குழந்தை பிறந்த 30 நாட்களுக்குள் ஆன்லைன் போர்ட்டல் மூலம் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது. ஆனால், புதிய விதியின்படி, பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருந்து, குழந்தைக்கு இந்தியக் குடியுரிமையைத் தக்கவைக்க விரும்பினால், இந்த 30 நாள் கட்டாயத் தகவல் அறிவிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஒருவேளை, அந்த குழந்தை இந்தியாவில் வசிக்கும் போதே ஏதேனும் ஒரு வெளிநாட்டின் குடியுரிமையைப் பெற்றால், அந்தத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பெற்றோர்கள் இமிக்ரேஷன் அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும்.

Advertisement

வழிகாட்டுதல்கள்

மருத்துவமனைகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள்

இவற்றுடன், வெளிநாட்டினருக்குத் தங்கும் வசதியுடன் கூடிய மருத்துவச் சிகிச்சைகளை வழங்கும் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம் மற்றும் பிற மருத்துவ நிறுவனங்களுக்கான அறிக்கையிடல் விதிகளும் இந்த புதிய அறிவிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மருத்துவ நிறுவனங்கள் தங்களின் வளாகத்தில் தங்கிச் சிகிச்சை பெறும் வெளிநாட்டினரின் விவரங்களைச் சட்டக் கட்டமைப்பிற்குள் துல்லியமாகப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement