பச்சை பொய்! ஈரான் மீதான தாக்குதலுக்கு இந்தியத் துறைமுகங்கள் பயன்படுகிறதா? வெளியுறவுத்துறை விளக்கம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா தனது கடற்படை மூலம் ஈரானைத் தாக்க இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்தி வருவதாக வெளியான செய்திகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ராணுவ கர்னல் டக்ளஸ் மெக்ரிகோர் அளித்த நேர்காணல் ஒன்றில், அமெரிக்கக் கடற்படை இந்தியத் துறைமுகங்களை நாடிச் செல்வதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் இது ஒரு முற்றிலும் தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட செய்தி என்று விளக்கம் அளித்துள்ளது.
வைரல் வீடியோ
வைரல் வீடியோவில் இருந்தது என்ன?
அமெரிக்காவின் ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மெக்ரிகோர் பின்வருமாறு கூறியிருந்தார்: "எங்களுடைய (அமெரிக்கா) அனைத்துத் தளங்களும், துறைமுகக் கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டுவிட்டன. எனவே, நாங்கள் இப்போது இந்தியாவையும் இந்தியத் துறைமுகங்களையும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்." இந்தக் கூற்று முற்றிலும் ஆதாரமற்றது என்று இந்திய வெளியுறவுத் துறையின் ஃபேக்ட் செக் பிரிவு எச்சரித்துள்ளது. இத்தகைய போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Fake News Alert!
— MEA FactCheck (@MEAFactCheck) March 4, 2026
Claims being made on OAN, a US based channel that Indian ports are being used by the US Navy are fake and false. We caution you against such baseless and fabricated comments. pic.twitter.com/xiFWnkoXBk
போர் பதற்றம்
இந்தியப் பெருங்கடலில் நிலவும் போர் பதற்றம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் தற்போது இந்தியப் பெருங்கடல் வரை நீண்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. இதில் 87 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல், இந்தியாவிற்கு ஒரு நட்பு ரீதியான பயணத்தை மேற்கொண்டிருந்த போது தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஒரு போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடிப்பது இதுவே முதல்முறை என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
உச்சகட்ட மோதல்
உச்சகட்ட மோதலில் அமெரிக்கா - ஈரான்
ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போர் 6 வது நாளை எட்டியுள்ளது. இதுவரை ஈரானில் 1,000 க்கும் மேற்பட்டோரும், இஸ்ரேலில் சுமார் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 அமெரிக்க வீரர்களும் இந்தப் போரில் பலியாகியுள்ளனர். "நாங்கள் முதலில் தாக்கவில்லை என்றால், ஈரான் இஸ்ரேலையும் எங்களையும் தாக்கியிருக்கும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார். இருப்பினும், இந்தியா தொடர்ந்து அமைதி காக்குமாறும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறுமே வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.