இந்திய தூதரை குருத்வாராவிற்குள் நுழைய விடாததால் சர்ச்சை: ரிஷி சுனக்கை அணுகியது இந்திய அரசாங்கம்
இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து இந்திய அரசாங்கம் இங்கிலாந்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் நடந்து வரும் நிலையில் ஒரு இந்திய தூதருக்கு ஸ்காட்லாந்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆல்பர்ட் டிரைவில் உள்ள கிளாஸ்கோ குருத்வாராவின் குருத்வாரா கமிட்டி உறுப்பினர்களுடன் விக்ரம் துரைசாமி சந்திப்பதாக இருந்தது. அந்த சந்திப்பிற்காக ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்கு சென்றிருந்த துரைசாமியை தீவிர சீக்கியர்கள் தடுத்து நிறுத்தினர். இந்திய தூதரை ஸ்காட்லாந்து குருத்வாராவிற்கு வெளியே தடுத்து நிறுத்திய அந்த தீவிர பிரிட்டிஷ் சீக்கிய ஆர்வலர்கள் குழு, அவர் அங்கு "வரவேற்கப்படவில்லை" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து வெளியுறவு அலுவலகத்தை தொடர்பு கொண்ட இந்தியா
மேலும், அவரை குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுத்த சில காலிஸ்தான் சார்பு தீவிர சீக்கியர்கள், "இங்கிலாந்தில் உள்ள எந்த குருத்வாராவிலும் இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை" என்று தெரிவித்துள்ளனர். குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் துரைசாமியை தீவிர சீக்கிய ஆர்வலர்கள் தடுத்தபோது ஸ்காட்லாந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குருத்வாராவின் கமிட்டி உறுப்பினர்களும் தூதுவர் விக்ரம் துரைசாமி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய முயன்றனர். இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தை இங்கிலாந்து வெளியுறவு அலுவலகத்திடம் தற்போது இந்தியா எடுத்துக் கூறியுள்ளது. இதற்கு இங்கிலாந்து வெளியுறவுத்துறை என்ன பாதிலளித்தது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.