17,000 கோடி ரூபாய் மதிப்பில் புதிய எரிவாயு சேமிப்புக் கிடங்கைக் கட்டமைக்க திட்டமிடும் இந்தியா
இந்தியாவில் புதிய பெரிய இயற்கை எரிவாயு கிடங்குகளை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது மத்திய அரசு. மாறிவரும் புவிசார் அரசியல் காரணமாக சர்வதேச எரிவாயு சந்தையானது நிலையிலாத்தன்மையைக் கொண்டிருக்கும் நிலையில், அவசர காலத்தில் உள்நாட்டுத் தேவையை சமாளிக்க கையிருப்பில் இயற்கை எரிவாயு இருப்பது அவசியம் என நினைக்கிறது மத்திய அரசு. எனவே, சுமார் 4 பில்லியன் கியூபிக் மீட்டர்கள் அளவு இறக்குமதி செய்யப்பட்டும் எரிவாயுவை சேமிக்கும் திறனுடைய சேமிப்புக் கிடங்குகளை கட்டமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தற்போது ஒப்புதல் அளித்திருக்கிறார். மேலும், இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களிடம் புதிய சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருக்கிறார் அவர்.
இந்தியாவின் திட்டம் என்ன?
இதற்கு முன்னரும் தேசிய ஆற்றல் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், புதிய கிடங்குகள் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டது என்ற போதும் அதற்காக ஆகும் செலவை மனதில் வைத்து அத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. தற்போது தேவை ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 3-4 பில்லியன் கியூபிக் மீட்டர்கள் அளவிலான இயற்கை எரிவாயு கிடங்கைக் கட்டமைக்க 1 முதல் 2 பில்லியன் டாலர்கள் வரை (இந்திய மதிப்பில் 17,000 கோடி ரூபாய்) செலவாகலாம் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. புதிய எரிவாயு சேமிப்புக் கிடங்கு அமைப்பதன் மூலம், அண்டை நாடுகளுக்கான இயற்கை எரிவாயு மையமாகவும் இந்தியா திகழ முடியும் எனத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு.