சித்தமருத்துவர் ஷர்மிகா மீது புகார்-இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டிஸ்
சமீப காலங்களில் சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அவர் பதிவு செய்து வரும் மருத்துவ குறிப்புகள் தவறானது என்று புகார்கள் எழுந்தன. ஷர்மிகா மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்த நிலையில், அவர் வெளியிட்ட மருத்துவ குறிப்பு பதிவுகள் குறித்து விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் ஒன்றினை அளித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மைக்காலமாக கர்ப்பம் தரிப்பது, உணவு பழக்கங்கள் குறித்த சர்ச்சையான கருத்துக்களை ஷர்மிகா சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என நோட்டிஸ்
சித்த மருத்துவர் ஷர்மிகா கவிழ்ந்து படுத்தால் மார்பகப் புற்றுநோய் வரும், ஒரு குளோப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை கூடி விடும், நம்மைவிட பெரிய மிருகம் என்பதால் பீஃப் கறியை சாப்பிட கூடாது போன்ற கருத்துக்களையும், கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவு பழக்கங்கள் குறித்து தவறான கருத்துக்களையும் பதிவு செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து அவர், 15 நாட்களுக்குள் தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ இயக்குனரகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஆஜராகி அவர் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.