வானில் எதிரிகளை வேட்டையாடும் இந்திய ஏவுகணை! குஷா ஏவுகணை சோதனை வெற்றி! எஸ்-400க்கு மாற்றாகப் புதிய சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குஷா நீண்ட தூர மேற்பரப்பில் இருந்து வான்வழி இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை அமைப்பின் (LRSAM) முதல் பறத்தல் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. வானில் அதிவேகத்தில் பறந்து வந்த இலக்கை இந்த ஏவுகணைத் தொகுதி மிகத் துல்லியமாக இடைமறித்து அழித்துள்ளது.
எஸ்-400
ரஷ்யாவின் எஸ்-400 அமைப்பிற்கு மாற்றாகும் திட்டம்
தற்போது இந்திய விமானப்படை 80 கிமீ தூரம் வரை பாயும் எம்ஆர்-சாம் (MR-SAM) மற்றும் ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட 400 கிமீ தூரம் பாயும் எஸ்-400 டிரையம்ப்ட் அமைப்புகளைப் பயன்படுத்தி வருகிறது.
இந்த இரண்டிற்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்கும் நோக்கிலும், எதிர்காலத்தில் வெளிநாட்டு இறக்குமதிகளை முற்றிலுமாகத் தவிர்க்கும் நோக்கிலும் சுமார் ரூ.21,700 கோடி செலவில் இந்த குஷா திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இது இந்தியாவின் 'தேசி எஸ்-400' (Desi S-400) என்றும் அழைக்கப்படுகிறது.
தொழில்நுட்பம்
3 நிலைகளில் இலக்குகளை அழிக்கும் தொழில்நுட்பம்
'குஷா' வான் பாதுகாப்பு அமைப்பு மூன்று வகையான ஏவுகணை வேரியண்ட்களை (M1, M2, M3) கொண்டுள்ளது.
இதன்படி, M1 ஏவுகணை 150 கிமீ தூரத்திலும், M2 ஏவுகணை 250 கிமீ தூரத்திலும், M3 ஏவுகணை 350 முதல் 400 கிமீ தூரம் வரையிலும் உள்ள எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.
இதன் மூலம் எதிரி நாடுகளின் போர் விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் உளவு விமானங்களை எல்லைப் பகுதியிலேயே இடைமறித்து அழிக்க முடியும்.
சுதர்சன சக்ரா
'சுதர்சன சக்ரா' திட்டத்தின் முக்கியப் பிரிவு
பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட மிஷன் சுதர்சன சக்ரா திட்டத்தின் கீழ், 2035 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிற்கு முழுமையான பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் இந்த குஷா ஏவுகணை மிக முக்கியமான பங்க வகிக்கிறது.
இந்த அமைப்பில் உள்ள ஏவுகணைகள், ரேடார்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் என அனைத்தும் இந்திய அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் உள்நாட்டுத் தொழில் கூட்டாளர்களால் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இலக்கு
2028இல் ராணுவத்தில் இணைக்க இலக்கு
தற்போது முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், M2 மற்றும் M3 ஏவுகணை வேரியண்ட்களின் சோதனைகளும், அதைத் தொடர்ந்து இந்திய விமானப்படையின் நேரடி பயன்பாட்டு சோதனைகளும் அடுத்தடுத்து நடத்தப்பட உள்ளன.
அனைத்து சோதனைகளும் நிறைவடைந்து வரும் 2028 ஆம் ஆண்டிற்குள் இந்த குஷா வான் பாதுகாப்பு அமைப்பு இந்திய ராணுவத்தில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்திய ராணுவத்தின் தற்காப்புத் திறனை உலகளவில் பல மடங்கு உயர்த்தும்.