கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் சாதனை: அமெரிக்காவால் கூட முடியாததை இந்தியா சாதித்தது எப்படி? அணுசக்தித் துறையில் புதிய வரலாறு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட புரோட்டோடைப் ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர் (PFBR), கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி இரவு 8.25 மணிக்குத் தனது முதல் 'கிரிட்டிகாலிட்டி' நிலையை எட்டியுள்ளது. அதாவது, இந்த அணு உலை முதல் முறையாகத் தானாகவே தொடர்ச்சியான அணுக்கரு சங்கிலி வினையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக வணிக ரீதியிலான ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டரை இயக்கும் உலகின் இரண்டாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகள் பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவழித்தும் முடியாத ஒரு காரியத்தை இந்திய விஞ்ஞானிகள் சாதித்துக் காட்டியுள்ளனர்.
முக்கியத்துவம்
ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர் (FBR) ஏன் இவ்வளவு முக்கியமானது?
ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர் என்பது சாதாரண அணு உலைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. சாதாரண உலைகள் யுரேனியம் எரிபொருளைப் பயன்படுத்தி ஆற்றலை உருவாக்கும். ஆனால், இந்த எஃப்பிஆர் (FBR) வகை உலைகள், அவை பயன்படுத்தும் எரிபொருளை விட அதிக அளவிலான புதிய எரிபொருளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இந்தியாவில் யுரேனியம் இருப்பு குறைவாகவும், தோரியம் (Thorium) இருப்பு உலகிலேயே மிக அதிகமாகவும் உள்ளது. இந்த உலைகளின் மூலம் இந்தியாவின் கடற்கரை ஓரங்களில் கொட்டிக் கிடக்கும் தோரியத்தைப் பயன்படுத்தி, பல நூற்றாண்டுகளுக்குத் தேவையான மின்சாரத்தைத் தடையின்றி உற்பத்தி செய்ய முடியும். இது டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா கனவு கண்ட 'மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்தின்' இரண்டாம் கட்டமாகும்.
வல்லரசு நாடுகள் தோல்வி
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் தோல்வியடைந்தது ஏன்?
அணுசக்தித் துறையில் முன்னோடிகளான அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இந்தத் தொழில்நுட்பத்தில் பெரிய முதலீடுகளைச் செய்தும் தோல்வியையே தழுவின. அமெரிக்காவின் 'ஃபெர்மி 1' (Fermi 1) மற்றும் 'கிளின்ச் ரிவர்' திட்டங்கள் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் சோடியம் கசிவு காரணமாக நிறுத்தப்பட்டன. அதேபோல், பிரான்ஸ் நாட்டின் 'சூப்பர்பீனிக்ஸ்' (Superphenix) என்ற பிரம்மாண்ட உலை சோடியம் கசிவு, தீ விபத்து மற்றும் அரசியல் எதிர்ப்புகளால் 1998ல் நிரந்தரமாக மூடப்பட்டது. ஜப்பானின் 'மோஞ்சு' உலையும் இதே போன்ற விபத்துகளால் முடக்கப்பட்டது. ஆனால், இந்திய விஞ்ஞானிகள் பல ஆண்டுகால உழைப்பிற்குப் பிறகு, இந்தச் சவால்களை முறியடித்துத் தொழில்நுட்ப ரீதியாக வெற்றி பெற்றுள்ளனர்.
எரிசக்தி பாதுகாப்பு
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் கல்பாக்கத்தின் பங்கு
தற்போது இந்தியா சுமார் 8 ஜிகாவாட் அணுமின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. 2047ம் ஆண்டுக்குள் இதனை 100 ஜிகாவாட்டாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கல்பாக்கம் உலையின் வெற்றி, இந்தியா மற்ற நாடுகளிடம் இருந்து யுரேனியம் இறக்குமதி செய்வதைக் கணிசமாகக் குறைக்கும். இந்த ஒரு உலை மட்டுமே சுமார் 30 லட்சம் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் திறன் கொண்டது. உலக அளவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் போர்ச் சூழல்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து இந்தியாவைப் பாதுகாப்பதோடு, எரிசக்தித் துறையில் இந்தியா ஒரு தற்சார்பு நாடாக மாற இது ஒரு மிகப்பெரிய படிக்கல்லாகும். பிரதமர் மோடி இந்தச் சாதனையை இந்தியாவின் சிவில் அணுசக்திப் பயணத்தில் ஒரு "வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்" என்று பாராட்டியுள்ளார்.