Page Loader
உயரும் விமானக் கட்டணம்.. ஆய்வு செய்த சர்வதேச கூட்டமைப்பு!
இந்தியாவில் உயரும் விமானக் கட்டணம்

உயரும் விமானக் கட்டணம்.. ஆய்வு செய்த சர்வதேச கூட்டமைப்பு!

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 12, 2023
01:19 pm

செய்தி முன்னோட்டம்

ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவிலேயே வெளிநாட்டு விமானப் பயணங்களுக்கான கட்டணம் அதிகளவில் உயர்ந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது சர்வதேச விமான நிலையக் கூட்டமைப்பு (ACI). ஆசியா பசிபிக் பிராந்தியத்திற்கான சர்வதேச விமான நிலையக் கூட்டமைப்பானது, இந்தப் பகுதியில் விமானப் பயணங்களுக்கான கட்டணம் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது. ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள முதல் 10 விமானப் போக்குவரத்து சந்தைகளில் இயக்கப்படும் 36,000 வழித்தடங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறது சர்வதேச விமான நிலையக் கூட்டமைப்பு. அதில் சர்வதேச விமானப் பயணங்களுக்கான கட்டணம் 50% வரை உயர்ந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும், உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான கட்டணம் 10% வரை மட்டுமே உயர்ந்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா

அதிகளவு கட்டண உயர்வைச் சந்தித்த இந்தியா? 

41% உயர்வுடன் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவே அதிகளவு விமான பயணங்களுக்கான கட்டண உயர்வைச் சந்தித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து யுஏஇ (34%), சிங்கப்பூர் (30%) மற்றும் ஆஸ்திரேலியா (23%) ஆகிய நாடுகள் உள்ளன. 2021-ல் கொரோனா காலத்திற்குப் பிறகு, தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட விமான நிறுவனங்கள் விமானப் பயணங்களுக்கான கட்டணத்தை உயர்த்தின. ஆனால், கடந்த 2022 நிதியாண்டில் பெரும்பாலான சர்வதேச விமான நிறுவனங்கள் நல்ல லாபத்தையே பதிவு செய்திருக்கின்றன. இருந்தும் விமானக் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ACI. அதிகளவிலான விமானப் போக்குவரத்திற்கான தேவை இருக்கும் இந்த நேரத்தில், அதனைப் பூர்த்தி செய்யும் அளவிற்கான சேவை இல்லாததே இந்த கட்டண உயர்விற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.