ஈரான் போர் சூழல்: அர்மீனியா, அஜர்பைஜான் தரைவழி எல்லைகள் மூலம் இந்தியர்கள் வெளியேற்றம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியர்களை இந்தியா எவ்வாறு மீட்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் வான்வெளி மூடப்பட்ட நிலையில், ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளின் தரைவழி எல்லைகள் வழியாக வெளியேற்றும் பணிகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரானின் வான்பாதை மூடப்பட்டுள்ளதால், அங்கிருந்து நேரடி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், ஈரானில் உள்ள சுமார் 9,000 இந்தியர்களில் தாயகம் திரும்ப விரும்புவோரை, அண்டை நாடுகளான அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் எல்லைகளுக்கு பேருந்துகள் மூலம் அழைத்து செல்ல இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
நிலவரம்
தற்போதைய நிலவரம்
இதுவரை சுமார் 650 இந்தியர்கள் தரைவழியாக ஈரானை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் 550-க்கும் மேற்பட்டோர் அர்மீனியா வழியாகவும், சுமார் 90 பேர் அஜர்பைஜான் வழியாகவும் எல்லைகளை கடந்துள்ளனர். மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் புனித பயணம் மேற்கொண்ட யாத்ரீகர்கள் ஆவர். அர்மீனியாவின் யெரெவன் விமான நிலையத்திலிருந்து இவர்கள் வணிக ரீதியிலான விமானங்கள் மூலம் இந்தியா திரும்புகின்றனர். தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து இயங்கி வருகிறது. விசா நடைமுறைகள், பயண ஆவணங்கள் மற்றும் எல்லையை கடப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தூதரக அதிகாரிகள் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
ஆலோசனை
எச்சரிக்கை மற்றும் ஆலோசனை
ஈரானில் உள்ள இந்தியர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், வீட்டிற்குள்ளேயே இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்திய தூதரகத்தின் முன்னனுமதி இன்றி தன்னிச்சையாக எல்லைகளை கடக்க முயல வேண்டாம் என்றும், அது சட்ட ரீதியான சிக்கல்களை உருவாக்கும் என்றும் இந்தியத் தூதரகம் எச்சரித்துள்ளது. இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற ஒத்துழைப்பு நல்கிய அர்மீனியா அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.