வணிக கப்பல் தாக்குதல் விவகாரம்: 3 போர்க்கப்பல்களை அரபிக்கடலில் நிலைநிறுத்தியது இந்தியா
சமீபத்தில், இந்தியப் பெருங்கடலில் பயணித்து கொண்டிருந்த எம்வி கெம் புளூட்டோ என்ற வணிகக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, இந்தியா தற்போது போர்க்கப்பல்களை அரபிக்கடலில் நிலைநிறுத்தியுள்ளது. அந்த தாக்குதல் சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகும் நிலையில், இன்று மும்பை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த எம்வி கெம் புளூட்டோ கப்பலை இந்திய கடற்படையின் வெடிமருந்துகளை அகற்றும் குழு தீவிரமாக சோதனையிட்டது. அரபிக்கடலில் வணிகக் கப்பல்கள் நடத்தப்படும் தாக்குதல்களை கருத்தில் கொண்டு, அப்பகுதியை கண்காணிப்பதற்காக கடற்படை P-8I நீண்ட தூர ரோந்து விமானத்தை அரபிக்கடலில் நிலைநிறுத்தியுள்ளது.
எம்வி செம் புளூட்டோ மீது நடத்தப்பட்ட தாக்குதல்
அது போக, ஐஎன்எஸ் மோர்முகவோ, ஐஎன்எஸ் கொச்சி மற்றும் ஐஎன்எஸ் கொல்கத்தா ஆகிய போர்க்கப்பல்களையும் அரபிக்கடலுக்கு இந்திய கடற்படை அனுப்பியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள துறைமுகத்தில் இருந்து மங்களூரு நோக்கி கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற எம்வி செம் புளூட்டோவா கப்பல் மீது சில நாட்களுக்கு முன் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. லைபீரியாவின் கொடியை ஏந்திய அந்த கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் இஸ்ரேலை தளமாக கொண்டதாகும். மேலும், ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகளால் வணிக கப்பல்கள் குறிவைக்கப்பட்டன என்று அமெரிக்கா கூறியுள்ளது.