இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சோதனை ஓட்டம் 2027 மே மாதம் தொடக்கம்: அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மிக முக்கியக் கனவுத் திட்டமான 508 கிலோமீட்டர் நீளமுள்ள மும்பை - அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் பாதையின் சோதனை ஓட்டம் வரும் 2027-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். குஜராத்தின் சூரத் மற்றும் வாப்பி இடையிலான சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திற்குப் பயணிகள் ரயில் சேவையைத் தொடங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் 2027-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் (இறுதிப் பகுதியில்) இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சூரத் - பிலிமோரா பாதை
மின்மயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் நிறைவு
இந்தத் திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக, சூரத் மற்றும் பிலிமோரா இடையிலான 50 கிலோமீட்டர் இருவழிப் பாதையிலும் மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.
வழித்தடம் முழுவதும் நவீன 2×25 KV மின்சார அமைப்பும், 14 துணை மின்நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும், சூரத் - பிலிமோரா வழித்தடத்தில் நான்கு ஆறுகளின் குறுக்கே பாலங்களும், தேசிய நெடுஞ்சாலை-53 மீது இரும்புப் பாலமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு ஒலி மாசு ஏற்படுவதைத் தடுக்க சுமார் 94,000 ஒலித் தடுப்பான்களும் நிறுவப்பட்டுள்ளன.
உள்நாட்டு B28 ரயில்
2 மணி நேரத்திற்குள் மும்பை அகமதாபாத் பயணம்
மும்பை - அகமதாபாத் வழித்தடம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தவுடன், தற்போது சாலை வழியாக 8 முதல் 9 மணி நேரம் ஆகும் பயண நேரம் வெறும் 1 மணி நேரம் 58 நிமிடங்களாகக் குறையும்.
இதற்காக, மணிக்கு 280 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய உள்நாட்டுத் தயாரிப்பான 'B28' அதிவேக ரயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதன் முதல் கட்டமைப்புப் பணிகள் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த அதிவேக ரயில் வலையமைப்பையும் கண்காணிக்கத் தனி மத்தியக் கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்பட உள்ளது.
ரயில்வேயின் சீர்திருத்தம்
பண்டிகை காலத்தில் 20 கோடி பயணிகள் மற்றும் ரயில்வேயின் 59 சீர்திருத்தங்கள்
இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்துப் பேசிய அமைச்சர், கடந்த பண்டிகை காலத்தில் 18,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு சுமார் 20 கோடிப் பயணிகள் பயணித்ததாகத் தெரிவித்தார்.
கொரோனா காலத்திற்குப் பிறகு 2,500 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு மொத்தப் பயணிகளின் எண்ணிக்கை 800 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 'ரயில்ஒன்' (RailOne) செயலி 6 கோடி பதிவிறக்கங்களைக் கடந்துள்ளதுடன், 52 வாரங்களில் 52 சீர்திருத்தங்கள் என்ற இலக்கைத் தாண்டி இதுவரை 59 முக்கியச் சீர்திருத்தங்களை ரயில்வே வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது.