Loading...
சிந்து நதியில் இந்தியா கட்டிய முதல் பாறை அணை! பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்து லடாக்கில் விவசாயத்திற்கு திருப்பிவிட்டது
லடாக்கில் இந்தியாவின் முதல் பாறை அணை

சிந்து நதியில் இந்தியா கட்டிய முதல் பாறை அணை! பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்து லடாக்கில் விவசாயத்திற்கு திருப்பிவிட்டது

எழுதியவர் Sekar Chinnappan
Sep 05, 2026
12:11 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக முடக்கி வைத்துள்ள நிலையில், லடாக்கின் லே பகுதியில் உள்ள உப்ஷி என்ற இடத்தில் சிந்து நதியின் குறுக்கே இந்தியா தனது முதல் பாறை தடுப்பணையைக் கட்டியுள்ளது. இயற்கை பாறைகளை மட்டுமே கொண்டு, சிமெண்ட் எதுவும் பயன்படுத்தப்படாமல் கட்டப்பட்டுள்ள இந்த அணை, நதியின் நீர்மட்டத்தை சுமார் 10 அடிகள் வரை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் அப்பகுதி விவசாயிகள் வசந்த காலத்தில் தங்களின் விவசாய நிலங்களுக்குத் தேவையான நீரைப் பெற முடிகிறது.

நீண்டகால தட்டுப்பாடு

விவசாயிகளின் நீண்டகால நீர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு

ஆண்டுக் கணக்காக சிந்து நதியானது ஆழமான பள்ளத்தாக்குகள் வழியே மிகவும் தாழ்வான மட்டத்தில் பாய்ந்ததால், வசந்த காலத்தில் விதைகளை விதைக்கும் போது மோட்டார்களைப் பயன்படுத்தி நீரை இறைக்க முடியாமல் அப்பகுதி விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

தற்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்த அணை சுமார் 40 மில்லியன் லிட்டர் நீரை சேமித்து வைத்து, இகூ பே பாசனக் கால்வாய் வழியாக வறண்ட கிராமப்புற விவசாய நிலங்களுக்குத் தேவையான நீரை தங்குதடையின்றி வழங்கி வருகிறது.

எச்சரிக்கை

பாகிஸ்தானுக்கு செல்லும் ராஜதந்திர எச்சரிக்கை

இந்தத் திட்டம் லடாக்கின் விவசாயத்திற்கு உதவுவது மட்டுமின்றி, எல்லைப் பகுதியில் உள்ள பாகிஸ்தானுக்கு ஒரு வலுவான உத்திசார் செய்தியையும் அனுப்புகிறது.

சிந்து நதியின் நீர் பாகிஸ்தானின் கீழ்நோக்கிப் பாய்வதற்கு முன்பாகவே, அதைத் தடுத்து எல்லைப் பகுதி மக்களின் உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் தேவைகளுக்கு இந்தியா தீவிரமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது என்பதை இத்திட்டம் நிரூபிக்கிறது.

இது பாகிஸ்தானிற்கு பெரும் நெருக்குதலை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT

புதிய தடுப்பணைகள்

ரூ.56 கோடியில் 36 புதிய தடுப்பணைகள் கட்டத் திட்டம்

இந்த வெற்றியினைத் தொடர்ந்து, லடாக் யூனியன் பிரதேச நிர்வாகம் சிந்து நதியின் குறுக்கே மேலும் பல பாறைத் தடுப்பணைகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது.

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ரூ.56 கோடி மதிப்பிலான புதிய முன்மொழிவில், லே பிராந்தியத்தில் 7 இமயமலை பாறைத் தடுப்பணைகளும், கார்கில் பிராந்தியத்தில் 29 தடுப்பணைகளும் கட்டப்படவுள்ளன.

இத்திட்டங்கள் அனைத்தும் அப்பகுதியின் நீர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT