சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' தொடங்கப்பட்டது
செய்தி முன்னோட்டம்
போர்களமாக மாறியுள்ள சூடானில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
இந்த மீட்புப் பணிக்கு 'ஆபரேஷன் காவேரி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
"சூடானில் சிக்கித் தவிக்கும் நம் குடிமக்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' நடந்து வருகிறது. ஏற்கனவே, சுமார் 500 இந்தியர்கள் போர்ட் சூடானை(நகரம்) அடைந்துள்ளனர். இன்னும் பலர் வந்து கொண்டிருக்கின்றனர். நம் கப்பல்கள் மற்றும் விமானங்கள் அவர்களை வீட்டிற்கு அழைத்து வர தயாராக இருக்கிறது. சூடானில் உள்ள நம் சகோதரர்கள் அனைவருக்கும் உதவ உறுதிபூண்டுள்ளோம்." என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ட்வீட் செய்திருக்கிறார்.
DETAILS
சூடானில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது
ஜெட்டாவில்(நகரம்) விமானப்படை C-130J தயார் நிலையில் இருப்பதாகவும், INS சுமேதா போர்ட் சூடானை அடைந்துள்ளதாகவும் இந்தியா நேற்று அறிவித்திருந்தது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமையன்று சவுதி அரேபியாவை அடைந்தனர். இது தான் சூடானில் நடந்த முதற்கட்ட மீட்பு பணியாகும். இந்தியா உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அந்த குழுவில் இருந்தனர்.
இன்று அதிகாலையில், இந்தியர்கள் உட்பட 28 நாடுகளை சேர்ந்த 388 பேரை பிரான்ஸ் வெளியேற்றியது.
கார்ட்டூமில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் செயல்பாடுகள் "தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.
சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும்(RSF) இடையே நடந்து வரும் மோதல்களால் இதுவரை 413 பேர் உயிரிழந்துள்ளனர்.