
பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு; பாகிஸ்தானும் பதிலுக்கு நீட்டித்தது
செய்தி முன்னோட்டம்
வெள்ளிக்கிழமை (மே 23) சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வெளியிட்ட NOTAM அறிவிப்பின்படி, பாகிஸ்தான் விமானங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கான வான்வெளி இடைநிறுத்தத்தை ஜூன் 23 வரை இந்தியா நீட்டித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்த நிலையில், முன்னதாக, இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியை இந்த நீட்டிப்பு குறிக்கிறது.
வான்வெளி கட்டுப்பாடு இந்திய வான்வெளியைக் கடக்க முயற்சிக்கும் அனைத்து வணிக மற்றும் சிவிலியன் பாகிஸ்தான் விமானங்களையும் பாதிக்கிறது.
பாகிஸ்தான்
பாகிஸ்தானும் வான்வெளி தடையை நீட்டித்தது
இந்தியா ஜூன் 23 வரை பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளியை பயன்படுத்த தடையை நீட்டித்த நிலையில், பாகிஸ்தானும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் ஜூன் 24 வரை தடையை நீட்டித்துள்ளது. இதன்படி, இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை முழுமையாக நிறுத்தி உள்ளது.
இதனால், விமானங்கள் வேறு பாதைகளில் செல்ல வேண்டியுள்ளதால், அதற்கு கூடுதல் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது இது முதல் முறையல்ல.
2019 ஆம் ஆண்டு புல்வாமா-பாலகோட் மோதல் சம்பவத்திற்குப் பிறகு, அதிகரித்த பதற்றம் இருந்த காலங்களில், இரு நாடுகளும் வான்வெளியை இதேபோன்று சில காலத்திற்கு மூடி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.