ராகுல் காந்தி பாஜக எம்பிக்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்ததால் சர்ச்சை
மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, ராகுல்-காந்தியின் "தகாத நடத்தைக்கு" எதிராக சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார். பாஜக பெண் எம்.பி.க்கள் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் மக்களவையில் இன்று நடந்தது. இதில் கலந்துகொண்டு, எதிர்க்கட்சிகள் சார்பில் விவாதத்தை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். மணிப்பூர் விவகாரம் குறித்து தனது உரையின் போது பேசிய அவர், "இந்தியா என்பது மக்களின் குரலாகும். மணிப்பூரில் அந்தக் குரலைக் கொன்றுவிட்டீர்கள். மணிப்பூரில் பாரத மாதாவைக் கொன்றுவிட்டீர்கள். மணிப்பூர் மக்களைக் கொன்றுவிட்டீர்கள். இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்ல, நீங்கள் துரோகிகள்." என்று பாஜகவை சாடினார்.
'பெண் வெறுப்பு கொண்ட ஆணால் மட்டுமே இப்படி செய்ய முடியும்': ஸ்மிருதி இரானி
அதன்பிறகு, தனது உரையை முடித்த அவர், பாஜக எம்பிகளுக்கு பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டு மக்களவை கூட்டத்தை விட்டு வெளியேறினார். இதை கடுமையாக கண்டித்துள்ள பாஜக பெண் எம்பிக்கள், எம்பி ஸ்மிருதி இரானிக்கு அவர் பறக்கும் முத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். பாஜக பெண் எம்பிக்கள் சபாநாயகரிடம் கொடுத்த கடிதத்தில், "சபையில் உள்ள பெண் உறுப்பினர்களின் கண்ணியத்தை அவமதித்த நாடாளுமன்ற உறுப்பினரின் இத்தகைய நடத்தைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளனர். இது குறித்து பேசிய ஸ்மிருதி இரானி, "நாடாளுமன்றத்தில் வைத்து பெண் எம்.பி.க்களுக்கு ஒரு பெண் வெறுப்பு கொண்ட ஆணால் மட்டுமே பறக்கும் முத்தம் கொடுக்க முடியும். பெண்களைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை இது காட்டுகிறது." என்று தெரிவித்துள்ளார்.