உலக நாடுகளை ஆளப்போகும் சென்னை ஐஐடி; IITM Global மூலம் பன்னாட்டு கல்வி நிறுவனமாக அவதாரம்
செய்தி முன்னோட்டம்
ஐஐடி மெட்ராஸ் உலகளாவிய கல்வி நிறுவனமாக உருவெடுக்கும் வகையில், ஐஐடிஎம் குளோபல் என்ற புதிய திட்டத்தை இன்று (ஜனவரி 2) தொடங்கியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியை வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார். சென்னை ஐஐடியின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடியின் கூற்றுப்படி, இந்த ஐஐடிஎம் குளோபல் நான்கு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. அவை பின்வருமாறு:-
நோக்கங்கள்
நான்கு முக்கிய நோக்கங்கள்
இந்தியத் தொழில்நுட்பம் வெளிநாடுகளுக்கு: ஐஐடியின் கண்டுபிடிப்புகளை உலகளாவிய பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்லுதல். சர்வதேசத் திட்டங்கள் இந்தியாவுக்கு: வெளிநாட்டு ஆராய்ச்சித் திட்டங்களை இந்தியாவிற்குக் கொண்டு வருதல். ஸ்டார்ட்அப் விரிவாக்கம்: ஐஐடியின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தைகளை அணுகுவதற்கு வழிவகை செய்தல். அன்னிய முதலீடு: இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல்.
விரிவாக்கம்
உலகளாவிய விரிவாக்கம்
முதற்கட்டமாக, ஐஐடிஎம் குளோபல் அமெரிக்கா, துபாய், மலேசியா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஐந்து முக்கிய இடங்களில் தனது கிளைகளை நிறுவத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே தான்சானியாவில் ஐஐடி மெட்ராஸ் தனது வளாகத்தைத் தொடங்கிச் சிறப்பாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்காக அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
சிறப்பம்சங்கள்
விழாவின் சிறப்பம்சங்கள்
இந்தத் தொடக்க விழாவோடு, சென்னை ஐஐடியின் 'ஃபெஸ்டிவல் ஃபோர்ட்நைட்' (Festival Fortnight) என்ற இரண்டு வார கால விழாவும் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக: சாஸ்த்ரா 2026 (Shaastra): ஜனவரி 2 முதல் 6 வரை நடைபெறும் தொழில்நுட்பத் திருவிழா. சாரங் 2026 (Saarang): ஜனவரி 8 முதல் 12 வரை நடைபெறும் கலாச்சாரத் திருவிழா. ஓபன் ஹவுஸ் (Open House): பொதுமக்கள் ஐஐடியின் ஆய்வகங்கள் மற்றும் கண்டுபிடிப்பு மையங்களை நேரடியாகப் பார்வையிட அனுமதிக்கப்படுவர். இந்தியாவின் கல்வி மற்றும் தொழில்நுட்பத் திறனை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதில் இது ஒரு மைல்கல்லாக அமையும் என்று அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாராட்டியுள்ளார்.