தமிழர் பிரதமரானால் மகிழ்ச்சி, தமிழிசைக்கு வாய்ப்பு கொடுக்கலாம் - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு மாநில காவிரி டெல்டா மாவட்டத்தில் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று(ஜூன்.,12)தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார். இந்த அணையில் இருந்து தண்ணீரானது இதோடு 19வது முறையாக 90 ஆண்டுகளில் குறுவை சாகுபடிக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நீரானது திறக்கப்பட்டதனையடுத்து, 17.37 லட்சம் ஏக்கர் நிலம் நீர்பாசன வசதியினை பெறும் என்று கூறப்படுகிறது. இந்த நீர் திறப்பு விழாவில் அமைச்சர்களான கே.என்.நேரு, துரைமுருகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப்பேசிய தமிழக முதல்வர்,"காங்கிரஸ் ஆட்சியின்போது அறிவித்த திட்டங்கள் மட்டுமே இப்போதுவரை தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் அதிக ஜிஎஸ்டி வரி கொடுக்கும் தமிழ்நாட்டிற்கு எவ்வித சிறப்பு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்திற்கு மத்திய அரசு குறைந்த நிதியினை ஒதுக்கிவருகிறது" என்று கூறியுள்ளார்.
பழைய வரலாறு எதுவும் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை - மு.க.ஸ்டாலின்
இதனையடுத்து, அண்மையில் தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் இந்திய பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என்று அமித்ஷா பேசியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின்,"அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. 'தமிழரை பிரதமராக்க வேண்டும்' என்னும் அவரது பேச்சின் உள்நோக்கமும் புரியவில்லை. ஆனால், அமித்ஷாவின் பேச்சு எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்துள்ளது. எல்.முருகன் அல்லது தமிழிசை ஆகியோரில் ஒருவருக்கு இந்த வாய்ப்பினை கொடுக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளார். மேலும், "திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோத்திட்டத்தினை ஜெயலலிதா வெளிப்படையாக எதிர்த்தார். ஆனால் பின்னர் அத்திட்டத்தினை செயல்படுத்தி கல்வெட்டில் தனது பெயரினை பொறித்துக்கொண்டார். இதுபோல் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பலத்திட்டங்களுக்கு அதிமுக அரசு பெயர்பெற்றுள்ளது. இதுகுறித்த வரலாறு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை" என்று பேசியுள்ளார்.