நான்காம் காலாண்டில் குறைந்த லாபம்.. சரிவைச் சந்தித்த ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன பங்குகள்!
ஐசிஐசிஐ குழும நிறுவனங்களில் ஒன்றான ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டது. சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததையடுத்து இன்று அதன் பங்குகள் இறங்குமுகத்தில் இருக்கின்றன. முந்தைய நிதியாண்டின் நான்காம் காலாண்டை விட கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 23% குறைவான நிகர லாபத்தைப் பதிவு செய்திருக்கிறது ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம். முந்தைய நான்காம் காலாண்டில் ரூ.340 கோடி லாபம் ஈட்டியிருந்த அந்நிறுவனம், கடந்த நான்காம் காலாண்டில் ரூ.263 கோடி மட்டுமே லாபம் ஈட்டியிருக்கிறது. மேலும், அந்நிறுவனத்தின் முந்தைய கடைசி காலாண்டை விட 1% குறைவாக ரூ.885 கோடியை கடந்த கடைசி காலாண்டில் பதிவு செய்திருக்கிறது ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்.
பங்குச்சந்தையில் சரிவு:
முந்தைய ஆண்டை விட குறைவான லாபத்தைப் பதிவு செய்ததால் இன்று காலை இறங்குமுகத்திலேயே வர்த்தகத்தைத் தொடங்கியது அந்நிறுவனப் பங்குகள். நேற்று ரூ.463-ல் வர்த்தகத்தை நிறைவு செய்த அந்நிறுவனப் பங்குகள், இன்று காலை ரூ.440.85 என்ற அளவில் சரிவிலேயே வர்த்தகத்தைத் தொடங்கியது. மேலும், இந்நாளில் வர்த்தகத்தில் பெரிய மாற்றம் இன்றி அதே அளவிலேயே வர்த்தகமாகி வருகிறது. ஆனால், முதலீட்டாளர்களுக்கான நற்செய்தியாக ரூ.9.25-ஐ டிவிடெண்டாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்திற்கு நாளைய வர்த்தகமும் இதே போல் இறங்குமுகத்தில் தான் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.