நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட ஐசிஐசிஐ வங்கி.. ஏற்றத்தில் அந்நிறுவனப் பங்குகள்!
தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை கடந்த 22-ம் தேதி அறிவித்தது ஐசிஐசிஐ வங்கி. சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தது மட்டுமல்லாது, அதை விட சிறப்பான முடிவுகளை பதிவுசெய்திருக்கிறது ஐசிஐசிஐ வங்கி. முந்தைய நிதியாண்டின் கடைசி காலாண்டை விட, கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் 30% அதிகமாக 9,122 கோடி ரூபாய் நிகர லாபத்தைப் பதிவு செய்திருக்கிறது அந்நிறுவனம். அந்நிறுவனத்தின் பிரதான சேவையே கடன் சேவை தான். இந்த நான்காம் காலாண்டில் அதன் நிகர வட்டி வருவாய் முந்தைய நான்காம் காலாண்டை விட 40.2% அதிகமாக 17,667 கோடி ரூபாயைப் பதிவு செய்திருக்கிறது.
எதிர்பார்ப்பும் பங்குச்சந்தை எதிரொலியும்:
அந்நிறுவனத்தின் EPS-ம் (Earnings Per Share) ரூ.10.88-ல் இருந்து ரூ.13.84-ஆக உயர்ந்திருக்கிறது. மேலும், அந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் முந்தைய ஆண்டை விட 34.6%-மும், வைப்புநிதிகள் 10.9%-மும் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சந்தை எதிர்பார்ப்பை விட சிறப்பான காலாண்டு முடிவுகளைப் பதிவு செய்திருப்பதால் இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தை ஏற்றத்துடனே தொடங்கியிருக்கின்றன அந்நிறுவனப் பங்குகள். இன்று காலை 11 மணி நிலவரப்படி 1.25% ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன அந்நிறுவனப் பங்குகள். கடந்த நிதியாண்டு முழுவதுமே சிறப்பான முடிவுகளையே கொடுத்து வந்திருக்கிறது ஐசிஐசிஐ வங்கி. மேலும், முதலீட்டாளர்களுக்கான நற்செய்தியாக ரூ.8 டிவிடெண்ட் வழங்கவும் அந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.