சிரித்த முகத்துடன் இருப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட மணமகன் பலி
திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு "ஸ்மைல்-என்ஹான்ஸ்மென்ட்" அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஹைதராபாத்தை சேர்ந்த மணமகன் பலியாகியுள்ளார். 28 வயதான லக்ஷ்மி நாராயண விஞ்சம் என்ற மணமகன் பிப்ரவரி 16ஆம் தேதி ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸில் உள்ள FMS சர்வதேச பல் மருத்துவமனையில் 'ஸ்மைல் என்ஹான்ஸ்மென்ட்' அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது உயிரிழந்தார். அளவுக்கு அதிகமாக மயக்க மருந்தை உட்கொண்டதால் தனது மகன் உயிரிழந்ததாக லக்ஷ்மி நாராயண விஞ்சத்தின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். அறுவை சிகிச்சையின் போது தனது மகன் மயங்கி விழுந்ததை அடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் தன்னை மருத்துவமனைக்கு வரும்படி அழைத்ததாக ராமுலு விஞ்சம் தெரிவித்துள்ளார்.
மரணத்திற்கு மருத்துவர்களே காரணம் என்று குற்றச்சாட்டு
"நாங்கள் அவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்," என்று ராமுலு விஞ்சம் கூறியுள்ளார். தனது மகன் அறுவை சிகிச்சை குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும், தனது மகனின் மரணத்திற்கு மருத்துவர்களே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 16ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் லட்சுமி நாராயணன், கிளினிக்கிற்கு வந்ததாக ஜூப்லி ஹில்ஸ் நிலைய அதிகாரி கே.வெங்கடேஷ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார். "மாலை 4.30 மணியளவில், அவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அந்த செயல்முறை கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நீடித்தது. ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது." என்று ரெட்டி கூறியுள்ளார்.