காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது
தன் காதலியை வெட்டி கொன்ற ஒரு நபரை ஹைதராபாத் போலீஸார் நேற்று(மே 25) கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் பி.சந்திர மோகன்(48) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட சந்திர மோகன், இறந்த அனுராதா ரெட்டியை கத்தியால் குத்தி கொன்றதாகவும், பின்னர் அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். "மே 17அன்று, தீகல்குடா சாலைக்கு அருகில் உள்ள அப்சல் நகர் சமுதாயக் கூடத்திற்கு எதிரே இருக்கும் குப்பை கொட்டும் இடத்தில் கருப்பு கவரில் அடையாளம் தெரியாத பெண்ணின் தலை ஒன்று இருப்பதைக் கண்டதாக GHMC ஊழியர் ஒருவரிடம் இருந்து எங்களுக்கு புகார் வந்தது." என்று தென்கிழக்கு மண்டல DCP சிஎச்.ரூபேஷ் தெரிவித்தார்.
பணத்தை திருப்பி கேட்டதால் காதலியை குத்தி கொன்ற சந்திர மோகன்
இந்த வழக்கு விசாணையின் போது, இறந்தவர் ஒய்.அனுராதா ரெட்டி(55 வயது) என அடையாளம் காணப்பட்டார். விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவர் இறந்தவருடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. 2018ஆம் ஆண்டு முதல் அனுராதாவிடம் இருந்து சந்திர மோகன் ரூ.7 லட்சம் வரை பணம் வாங்கி இருக்கிறார். ஆனால், அதை திருப்பி கொடுக்கவில்லை. அந்த பணத்தை அனுராதா திருப்பி கேட்டதனால் கோபடைந்த சந்திர மோகன் திட்டமிட்டு மே 12ஆம் தேதி அன்று அனுராதாவை கத்தியால் குத்தி கொன்றார். அதன்பிறகு, அனுராதாவின் உடலை துண்டுதுண்டாக வெட்டிய அவர், உடல் பாகங்களை பிரிட்ஜில் வைத்திருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மே 15அன்று, அனுராதாவின் தலையை மட்டும் அவர் குப்பையில் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.