
ஹைதராபாத்: கனமழைக்கு இடையே சுவர் இடிந்து விழுந்ததில் 1 குழந்தை உட்பட 7 பேர் பலி
செய்தி முன்னோட்டம்
ஹைதராபாத்தில் உள்ள பாச்சுபல்லி பகுதியில் நேற்று மாலை இடைவிடாது பெய்த மழைக்கு மத்தியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வடனது ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, இறந்தவர்கள் ஒடிசா மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.
பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவின் பல பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால், மாநிலம் முழுவதும் வெள்ளம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா
தெலுங்கானாவுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகளின் கூற்றுப்படி, தேங்கி நிற்கும் தண்ணீரை சரிசெய்யவும், விழுந்த மரங்களை அகற்றவும் பேரிடர் நிவாரணப் படை(டிஆர்எஃப்) குழுக்கள் அந்த நகரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இன்று, இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெலுங்கானாவுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கையை விடுத்துள்ளது. அம்மாநிலத்தில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலோர ஆந்திரா மற்றும் ஏனாம், ராயலசீமா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30-40 கிமீ) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.