எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவாரா: நிபுணர்களின் கருத்து
சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு வழங்கிய இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைநிறுத்தினால், ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படமாட்டார் என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பப் பெயரைப் பற்றி தவறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்திருந்தது. ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதன் பின் ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது, நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தியின் தண்டனை 30 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்ட நிபுணர் ராகேஷ் திவேதி கூறிய கருத்துக்கள்
பிரதிநிதித்துவச் சட்டத்தின்(ஆர்பி) கீழ் ஒரு சட்டமியற்றுபவர் தகுதி நீக்கப்படாமல் இருக்க, தண்டனை இடைநிறுத்தப்படுவது அவசியம் என்று அரசியலமைப்பு சட்ட நிபுணர் ராகேஷ் திவேதி கூறியுள்ளார். "மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு தண்டனையை நீக்கி ஜாமீன் வழங்க வேண்டும். அப்படி நடந்தால் தகுதி நீக்கம் இருக்காது. இருப்பினும், அரசியல்வாதிகள் சட்ட நடவடிக்கைகளில் சிக்கி கொள்ளாமல் இருக்க தங்கள் வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார். குற்றம்சாட்டப்படுவதனால் மட்டும் தகுதி நீக்கம் செய்ய முடியாது. தண்டனை அறிவிக்கப்பட்டால் மட்டுமே தகுதி நீக்கம் செய்ய முடியும் என்றும் சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர். தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே தகுதி நீக்கம் காலம் தொடங்கிவிடும். மேலும், மேல்முறையீட்டு நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்தால், தகுதி நீக்கம் இடைநிறுத்தப்படும்.