2000 ரூபாய் நோட்டு அறிவிப்பு.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!
2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக நேற்று (மே 19) அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இதனைத் தொடர்ந்து இந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா, இது பணமதிப்பிழப்பா என மக்களுக்கு பல்வேறு சந்தைகங்கள் எழுந்திருக்கின்றன. எனவே, மேற்கூறிய அறிவிப்போடு இந்த மாற்றம் குறித்த செயல்முறையை சீராக்க பல்வேறு வழிமுறைகளையும், விளக்கங்களையும் சேர்த்து அளித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதா? இல்லை, 2000 ரூபாய் நோட்டுக்கள் முழுமையாகச் செல்லும். இது பணமதிப்பிழப்பு அறிவிப்பு இல்லை, திரும்பப்பெறும் முடிவு மட்டுமே. எப்போது மாற்றிக் கொள்வது? வரும் மே 23-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ம் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் 2000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யவோ, மாற்றிக் கொள்ளவோ முடியும்.
வேறு என்ன அறிவிப்புகள்:
அதிகபட்ச அளவு ஏதும் இருக்கிறதா? ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி வங்கியில் ஒரு முறையில் ரூ.20,000 வரையிலான 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள முடியும். ரூபாய் நோட்டுக்களை மாற்ற, குறிப்பிட்ட வங்கியில் நாம் கணக்கு வைத்திருக்க வேண்டுமா? இல்லை, வங்கிக் கணக்கு இல்லாதவர்களும் எந்த வங்கிக் கிளையிலும் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். ரூபாய் நோட்டுக்களை மாற்ற நாம் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டுமா? தேவையில்லை, 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிக்கோ அல்லது யாருக்கும் தனியாக எந்த விதமான கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. மேலும், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் சிரமத்தைக் குறைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.