LOADING...
தொகுதி மறுவரையறை வரலாறு: தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்கள் 41லிருந்து 39ஆக மாறியது எப்படி? முழு விவரம்
தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்கள் 41லிருந்து 39ஆக மாறிய பின்னணி

தொகுதி மறுவரையறை வரலாறு: தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்கள் 41லிருந்து 39ஆக மாறியது எப்படி? முழு விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 16, 2026
11:07 am

செய்தி முன்னோட்டம்

இந்திய அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளைச் சீரமைக்க தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதுவரை இந்தியாவில் 1952, 1963, 1973 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை இந்த ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1960களின் இறுதியில் நடந்த மறுவரையறை ஒரு மிகமுக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை தமிழ்நாட்டின் அரசியல் பலம் நாடாளுமன்றத்தில் அதிகமாக இருந்த நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டபோது ஒரு பின்னடைவு ஏற்பட்டது.

பின்னணி

41 இடங்கள் 39 ஆகக் குறைந்த பின்னணி

1950களின் தொடக்கத்தில் மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை 75 ஆக இருந்தது. எனினும், ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பிறகு, 1957 தேர்தலில் இது 41 ஆக குறைந்தது. 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் தமிழ்நாட்டிற்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், 1967 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையின்போது, 1961 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு கணக்கில் கொள்ளப்பட்டது. அப்போது வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், தமிழ்நாட்டிற்கான நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை 41லிருந்து 39 ஆகக் குறைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை தமிழ்நாட்டின் மக்களவை இடங்கள் 39 என்ற அளவிலேயே நீடிக்கின்றன.

மக்கள்தொகை கட்டுப்பாடு

மக்கள் தொகை கட்டுப்பாடும் அரசியல் இழப்பும்

தமிழ்நாடு அரசு குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள் தொகை மேலாண்மையைச் சிறப்பாக செயல்படுத்தியதே இந்த இடங்கள் குறைப்பிற்கு மறைமுகக் காரணமாக அமைந்தது. மக்கள் தொகையைக் குறைத்ததற்காக ஒரு மாநிலத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்ற விவாதம் அப்போது எழுந்தது. இதைக் கருத்தில் கொண்டே, 1976 ஆம் ஆண்டு அவசரநிலைக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 42 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தொகுதிகள் இருக்க வேண்டும் என 2001 ஆம் ஆண்டு வரை முடக்கப்பட்டது. பின்னர் 2001 ஆம் ஆண்டில் இது மேலும் 25 ஆண்டுகளுக்கு அதாவது 2026 வரை நீட்டிக்கப்பட்டது.

Advertisement

2002 மறுவரையறை

2002 ஆம் ஆண்டு மறுவரையறை மற்றும் தற்போதைய சூழல்

2002ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குல்தீப் சிங் தலைமையிலான கடைசித் தொகுதி மறுவரையறை ஆணையம், மாநிலங்களுக்கு இடையிலான இடங்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு 39 இடங்கள் என்பதில் மாற்றம் செய்யாமல், மாநிலத்திற்குள்ளே இருக்கும் தொகுதிகளின் எல்லைகளை மட்டுமே மக்கள் தொகைக்கு ஏற்ப சீரமைத்தது. தற்போது 2026க்குப் பிறகு வரவிருக்கும் புதிய தொகுதி மறுவரையறை குறித்துத் தமிழ்நாட்டில் பெரும் அச்சம் நிலவுகிறது. எதிர்க்கட்சிகள் இதுகுறித்து அச்சத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசு வட்டாரங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போது உள்ள இடங்களின் எண்ணிக்கையில் 50 சதவீத அளவிற்கு கூட்டப்பட்டு, எந்த மாநிலமும் பாதிக்கப்படாமல் இருக்க வழிவகை செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும்போது முழு விவரமும் தெரிய வரும்.

Advertisement