இமாச்சலில் மேகவெடிப்பு: 7 பேர் பலி, வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன
இமாச்சல பிரதேசத்தின் சோலனில் உள்ள ஒரு கிராமத்தில் மேக வெடிப்பு தாக்கியதால் 7 பேர் பலியாகினர். நேற்று இரவு ஜாடோன் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது. சிம்லாவின் சம்மர்ஹில் பகுதியில் சிவன் கோவில் இடிந்து விழுந்ததால் 25 முதல் 30 பேர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து கிடப்பதாக அஞ்சப்படுகிறது. பலத்த மழைக்கு மத்தியில் வழிபடுவதற்காக கிட்டத்தட்ட 50 பேர் அந்த கோவிலுக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் அண்டை மாநிலமான உத்தரகாண்டில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இமாச்சலில் 621 சாலைகள் மூடப்பட்டன
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால், அம்மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிம்லாவில் மரம் வேரோடு சாய்ந்து தனியார் பேருந்தின் மீது விழுந்ததால் கண்டக்டர் ஒருவர் காயமடைந்தார். தொடர் மழை காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 14(திங்கட்கிழமை) வரை விடுமுறை அளிக்கப்படுவதாக இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளார். மேலும், மண்டியில் 236, சிம்லாவில் 59 மற்றும் பிலாஸ்பூர் மாவட்டத்தில் 40 என மொத்தம் 621 சாலைகள் தற்போது மூடப்பட்டு, வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.