தமிழக பட்ஜெட் 2026: பெண்களுக்கு சொத்து பதிவில் 1% சலுகை! செமி கண்டக்டர் முதல் கப்பல் கட்டும் கொள்கை வரை
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். தேர்தல் ஆண்டையொட்டி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில், 'திராவிட மாடல்' அரசின் சாதனைகளை பட்டியலிட்டதுடன், எதிர்கால வளர்ச்சிக்கான பல்வேறு மைல்கல் திட்டங்களையும் அமைச்சர் அறிவித்தார்.
மகளிர்
மகளிர் மற்றும் சமூக நலன்
பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக, மகளிர் உரிமைத் தொகையுடன் ரூ. 2,000 கோடைகால சிறப்பு தொகை வழங்கப்பட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில், அவர்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 'புதுமைப் பெண்' திட்டத்தின் கீழ் 6.95 லட்சம் மாணவியரும், 'காலை உணவுத் திட்டத்தின்' கீழ் 19.34 லட்சம் மாணவர்களும் பயன்பெற்று வருகின்றனர். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக 'அன்புக் கரங்கள்' திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 2,000 வழங்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி
பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் துறை
தமிழகம் 11.19% பொருளாதார வளர்ச்சியுடன் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. மின்னணு உற்பத்தியில் 41% பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், செமி கண்டக்டர்(Semiconductor) உற்பத்தியை ஊக்குவிக்க 5 ஆண்டு திட்டமாக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கப்பல் கட்டும் தொழிலில் தமிழகத்தை உலகளாவிய மையமாக மாற்ற 'தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை' விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு
உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதி
கலைஞர் கனவு இல்லம்: 2030-க்குள் 8 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மறுவாழ்வு முகாம்கள்: இலங்கை தமிழர்களுக்காக ரூ. 630 கோடியில் 10,469 புதிய வீடுகள் கட்டும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடசென்னை வளர்ச்சி: ரூ. 6,045 கோடி மதிப்பீட்டில் வடசென்னை பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதோடு, ஊரக வளர்ச்சிக்காக ரூ. 28,687 கோடியும், மருத்துவத் துறைக்கு ரூ. 22,090 கோடியும், உயர்கல்வித் துறைக்கு ரூ. 8,505 கோடியும், நதிக்கரை மேம்பாட்டிற்க்காக ரூ. 374 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
செமி கண்டக்டர்
செமி கண்டக்டர் (Semiconductor) கொள்கை
மின்னணுத் துறை உற்பத்தியில் ஏற்கனவே 41 சதவீத பங்களிப்புடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையை மேலும் வலுப்படுத்த 'செமி கண்டக்டர்' திட்டத்திற்கான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன: 5 ஆண்டு செயல் திட்டம்: செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படும் வகையில் ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலீட்டு ஈர்ப்பு: இதன் மூலம் உலகளாவிய செமி கண்டக்டர் நிறுவனங்களை தமிழகத்தை நோக்கி ஈர்க்கவும், உள்ளூர் வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மையங்கள்: செமி கண்டக்டர் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்காகப் பிரத்யேக மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
நதிக்கரை
நதிக்கரை மேம்பாட்டு திட்டங்கள்
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஓடும் நதிகளை மீட்டெடுத்து, அவற்றின் கரைகளை அழகுபடுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிதி ஒதுக்கீடு: நதிக்கரை மேம்பாட்டு திட்டங்களுக்கு மட்டும் முதற்கட்டமாக ரூ. 374 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கிய நதிகள்: கூவம், அடையாறு, வைகை மற்றும் நொய்யல் நதிக்கரைகளை ஒட்டி நடைபாதைகள், பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்குத் தலங்கள் அமைக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு: ஆற்று நீரில் கழிவுகள் கலப்பதை தடுக்கவும், நதிக்கரைகளில் பசுமையை பாதுகாக்கவும் நவீன கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.