சென்னை அண்ணா சாலையில் ரூ.621கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் - அரசாணை வெளியீடு
சென்னை அண்ணா சாலையில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. இப்பகுதியில் பல்வேறு சந்திப்புகள் அமைந்துள்ள நிலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த நெரிசல் காரணமாக அண்ணா சாலை வழியே கிண்டி, தாம்பரம் போன்ற தூரமான பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் வைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக, அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது என்று கடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
மேம்பாலம் பன்னாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்ற பின்னரே கட்டப்படும் என தகவல்
அந்த அறிவிப்பின் படி, தற்போது போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.621 கோடி மதிப்பில் புதிய உயர்மட்ட மேம்பாலமானது, 3.5 கி.மீ.,தூரத்திற்கு அமைக்க நிர்வாக அனுமதியினை வழங்கி, தமிழக அரசு அரசாணையினை வெளியிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்பாலம், SIET கல்லூரி சாலை சந்திப்பு, நந்தனம் சந்திப்பு, செனெடாப் சந்திப்பு, எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, சி.ஐ.டி.சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களை கடந்து சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகே இறங்கும் வகையில் இதன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த நான்கு வழி மேம்பாலம், பன்னாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று, மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைக்கு மேல் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மேம்பாலம் ஒரு நவீன பொறியியல் சாதனையாக அமையும் என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.