
மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலம், விருதுநகர் மாவட்டம்-ராஜபாளையத்தில் கடந்த 2000ம் ஆண்டு பெட்ரோல், டீசலுக்கு இணையாக மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்து சர்ச்சைக்குள்ளானவர் ராமர் பிள்ளை.
ஆனால் அவர் கண்டறிந்தது மூலிகை பெட்ரோல் அல்ல போலி பெட்ரோல் என கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கானது சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
பின்னர் ராமர் பிள்ளை, அவரது மனைவி உள்பட 5 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.
அவரின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு, சிறைத்தண்டனையும் அறிவிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்முறையீடு செய்ததன் பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்கள் 5 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி இன்று(ஏப்ரல்.,27)ராஜபாளையத்தில் ராமர் பிள்ளை செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.
மூலிகை பெட்ரோல்
விற்பனை துவங்கியதாகவே அடுத்த அறிவிப்பு வெளியாகும் என நம்பிக்கை
அப்போது அவர் பேசுகையில், கடந்தமுறை நான் கண்டறிந்த பெட்ரோலினை முறையான அனுமதிப்பெற்று விற்பனை செய்தேன்.
ஆனால் அது போலி பெட்ரோல் என்றுக்கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
தற்போது என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என நிரூபித்துள்ளேன்.
விருதுநகரில் விரைவில் மூலிகை பெட்ரோல் ஆலை துவங்குவேன்.
அதில் மூலிகை பெட்ரோலினை அதிகளவில் தயாரித்து பொதுமக்களுக்கு ஒரு லிட்டர் ரூ.15க்கு என்னால் வழங்க முடியும், வழங்குவேன்.
தீர்ப்பு வெளியான பிறகு கடந்த 3 மாதங்களாக பெரியளவில் தொழிற்சாலை அமைக்கவும், விற்பனைக்கு அரசிடம் அனுமதி பெறும் பணிகளும் நடந்து வந்தது.
புதிய ஆலை துவங்க முதலீட்டாளர்களும் முன்வந்துள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த அறிவிப்பு விற்பனை துவங்கிவிட்டது என்றே வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.