பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பிரிகேட் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மெகா திட்டத்திற்கு ரெட் கார்டு: சுற்றுச்சூழல் அனுமதி ரத்து
செய்தி முன்னோட்டம்
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் (சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம்) பகுதியில், பிரபல கட்டுமான நிறுவனமான பிரிகேட் குழுமம் சார்பில் கட்டப்பட்டு வந்த பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் அனுமதி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்குகளில் கட்டுமான நிறுவனத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்து சில நாட்களிலேயே, மாநில சுற்றுச்சூழல் ஆணையம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருப்பது ரியல் எஸ்டேட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி
ரூ.2,000 கோடி மெகா திட்டத்திற்கு விழுந்த 'அடி'
பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை ஒட்டி சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பில், 1,250 சொகுசு வீடுகளை கட்டும் 'Brigade Morgan' என்ற திட்டத்திற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) முன்பு அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், இந்தத் திட்டத்தை முறைப்படி செயல்படுத்த வேண்டுமெனில், விதிகளின்படி மாநில ஈரநில வாரியத்திடமிருந்து கட்டாயம் முன்அனுமதி அல்லது ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். பிரிகேட் நிறுவனம் இந்த முக்கியமான அனுமதியை முறைப்படி வாங்கத் தவறியதன் காரணமாகவே, தற்போது அதன் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அனுமதியையும் அதிரடியாக ரத்து செய்து சுற்றுச்சூழல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப் போராட்டம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த சட்டப் போராட்டம்
முன்னதாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல அடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு எவ்வித கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடனும் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்னவ் மற்றும் 'அறப்போர் இயக்கம்' சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாகப் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடையும் விதித்திருந்தது.
வாதம்
கட்டுமான நிறுவனம் வைத்த வாதம் என்ன?
இந்த வழக்குகள் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது பிரிகேட் கட்டுமான நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,"கட்டுமானம் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட அந்த இடம் சதுப்பு நிலம் அல்ல; அது முழுமையான பட்டா நிலம் ஆகும். இதற்கான அனைத்து வருவாய்த்துறை ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அரசின் உரிய அனுமதிகளைப் பெற்ற பிறகே கட்டுமானங்கள் தொடங்கப்பட்டன, இதில் எவ்வித சட்டவிரோதமும் இல்லை" என்ற வாதத்தை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, அதிமுக நிர்வாகி மற்றும் அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த வழக்குகளைத் தள்ளுபடி செய்தது.
ரெட் கார்டு
சுற்றுச்சூழல் ஆணையத்தின் அதிரடி 'ரெட் கார்டு'
நீதிமன்றம் வழக்குகளை தள்ளுபடி செய்ததால் தங்களின் தடை நீங்கி, கட்டுமானப் பணிகளை மீண்டும் தடையின்றித் தொடரலாம் என்ற நிம்மதியில் பிரிகேட் நிறுவனம் இருந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சி சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. நீதிமன்றத் தடை நீங்கிய வேகத்திலேயே, தற்போது மாநில சுற்றுச்சூழல் ஆணையம் "ஈரநில வாரியத்தின் கட்டாய அனுமதி இல்லை" என்ற வலுவான காரணத்தைக் காட்டி, திட்டத்தின் சுற்றுச்சூழல் அனுமதியையே ரத்து செய்து 'ரெட் கார்டு' கொடுத்துள்ளது. இயற்கை ஆர்வலர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள நிலையில், இத்திட்டத்தின் எதிர்காலம் மற்றும் அதில் முதலீடு செய்தவர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.