
ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் சிறை: காவல் நீடிக்கப்படுமா என்பது நாளை தீர்மானக்கப்படும்
செய்தி முன்னோட்டம்
பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்க இயக்குனரகத்தால் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஒரு நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க இயக்குனரகம் கோரியுள்ளது. இது தொடர்பான தீர்ப்பு நாளை பிற்பகல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ. 600 கோடி நில மோசடியில் அவருக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்க இயக்குனரகம் குற்றம்சாட்டியுள்ளது.
அதனால் அவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை இன்று காலை ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் அஜார்படுத்த அமலாக்கத்துறை முடிவு செய்திருந்தது.
ஆனால், அவர் அதற்குள் உச்சநீதிமன்றத்தில் தன்னை விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தார்.
ஜார்க்கண்ட்
இது குறித்து நாளை விசாரிக்க இருக்கும் உச்ச நீதிமன்றம்
அவர் தனது மனுவில், "ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை சீர்குலைக்க அமலாக்க இயக்குனரகம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தவறான முறையில் செயல்பட்டது" என்று கூறியிருந்தார்.
அவரது கைது "சட்டவிரோதமானது மற்றும் அதிகார வரம்பு இல்லாதது" என்றும் அவர் கூறியிருந்தார்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நாளை பிற்பகல் 2 மணிக்கு அந்த மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டது.
அவரது மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டதால், ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தனது உத்தரவை வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இதனிடையே, ஹேமந்த் சோரனுக்கு பதிலாக முதல்வராக பதவியேற்க உள்ள சம்பை சோரன், ஜார்கண்ட் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து, புதிய அரசாங்கத்தை அமைக்க தனக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.