நாகாலாந்தின் முதல் பெண் எம்எல்ஏ: வரலாறு படைத்தார் ஹெகானி ஜகாலு
நாகாலாந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற வரலாற்றை ஹெகானி ஜகாலு என்ற பெண்மணி படைத்துள்ளார். திமாபூர் III தொகுதிக்கான தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி(NDPP) வேட்பாளர் ஜகாலு, லோக் ஜனசக்தி கட்சியின்(ராம் விலாஸ்) அசெட்டோ ஜிமோமியை 1,536 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இம்முறை நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் ஹெகானி ஜகாலு, சல்ஹவுடுவோனுவோ க்ரூஸ், கஹுலி செமா மற்றும் ரோஸி தாம்சன் ஆகிய நான்கு பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 48 வயதான ஜகாலு 1,536 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்ற எம்எல்ஏ
நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில், நான்கு பேர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அமெரிக்காவில் தனது கல்வியை முடித்திருக்கிறார். அதன்பிறகு, "யூத்நெட் நாகாலாந்து" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவியுள்ளார். இது இளைஞர்களின் படிப்பு மற்றும் வணிக முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு முயற்சியாகும். இதனால் இந்த தொண்டு நிறுவனம் வடகிழக்கு மாநிலம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. 2018ஆம் ஆண்டில், ஜகாலு சமூகத்திற்கு அவர் செய்த தொண்டுகளுக்காக மதிப்புமிக்க நாரி சக்தி புரஸ்கார் விருதைப் பெற்றார். தற்போதைய நிலவரப்படி, நாகாலாந்தில் ஆளும் என்டிபிபி-பாஜக கூட்டணி 40 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க உள்ளது.