தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு மாநிலத்தின் 10 மாவட்டங்களில் இன்று(டிச.,8) கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி, காரைக்கால் மற்றும், தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இடி மின்னலுடன் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, மதுரை, தென்காசி, கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கன்னியாகுமாரி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
சூறாவளி காற்று 50 கி.மீ.,வேகம் வரை வீசக்கூடும்
இதனை தொடர்ந்து நாளை(டிச.,9) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிகிறது. கோவை, தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் இன்று மற்றும் நாளை சூறாவளி காற்று 50 கி.மீ.,வேகம் வரை வீசக்கூடும் என்பதால் அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.